திமுகவின் லட்சியத்துக்காக இறுதி வரை வாழ்ந்து மறைந்தவர் கோ.சி.மணி - ஸ்டாலின் புகழாரம்
மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியின் படத்திறப்பு விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.
கும்பகோணம்: திமுகவின் லட்சியத்துக்காவும், கொள்கைக்காகவும், வாழ்நாள்முழுவதும் வாழ்ந்து மறைந்த முன்னோடி கோ.சி.மணி என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி கடந்த 2-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். அவரது உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கோ.சி.மணியின் உருவப்படத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: ஊராட்சி தலைவர், மாவட்ட செயலாளர், மேலவை உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கோ.சி.மணி.

இதையெல்லாம் தாண்டி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கண்மணியாக திகழ்ந்தவர். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மனசாட்சியாக வாழ்ந்தவர் கோ.சி.மணி. தமிழகத்தில் நகரம், பேரூர், ஊராட்சி, கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் குடிநீர்த் தேக்க தொட்டி அமைக்க அடித்தளமிட்டவர் கோ.சி.மணி. உள்ளாட்சித்துறை அமைச்சராக அவர் இருந்தபோதுதான் உள்ளாட்சி துறையில் நல்லாட்சி தந்தார்.

மாவட்ட செயலாளர் என்றால் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்தவர். தி.மு.க.வின் கொள்கை, லட்சியத்தை வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய முன்னோடி கோ.சி.மணி ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


Click it and Unblock the Notifications
