Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவினர் சாலை விபத்தில் இறந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்.. ஸ்டாலின் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: "திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும்." என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரை உத்தங்குடி பகுதியில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், கட்சிக்காக உழைக்கும் திமுக தொண்டர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

DMK to Provide 10 Lakh Relief for Families of Members Killed in Accidents Announces Stalin

ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "தொண்டர்களின் நம்பிக்கைதான் நம்முடைய முதல் பலம். என் இயக்கம்.. என் கட்சி.. என் தலைமை என்ற எண்ணம் கொண்டவர்கள் நம்முடைய தொண்டர்கள். "நானும் - என் குடும்பமும் கழகத்துக்காக இருக்கிறோம். கழகம் எனக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்கிறது" என்ற எண்ணம்தான், இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்திருக்க அடிப்படை காரணம். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்.

ரூ.10 லட்சம் நிவாரண நிதி

திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்.

நான் உங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொள்வது, பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளும், அவர்கள் சொல்வதை நிறைவேற்றும் தொண்டர்களும்தான் கழகத்தின் வலிமை! நிர்வாகிகளை, தொண்டர்கள் முன்னோடிகளாக கருத வேண்டும்.

இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்

தொண்டர்கள் இல்லாமல் எந்த இயக்கமும் இருக்க முடியாது. அதேபோல் நிர்வாகிகள் இல்லாலும் செயல்பட முடியாது. இருவருமே நம்முடைய கொடியில் இருக்கும் கருப்பு சிவப்பு போன்று, ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் - தங்களுக்குக் கீழ் இருக்கும் நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். தாங்கும் தூண்கள் இல்லாமல், கோபுரம் நிற்க முடியாது என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

தி.மு.க என்று இயக்கம் தொடங்கும்போதே, இளைஞர்களால் உருவான இயக்கம். பேரறிஞர் அண்ணாவுக்கு அப்போது 40 வயதுதான். தலைவர் கலைஞருக்கு 25 வயசு. பேராசிரியருக்கு 27 வயசு. நாவலர், மதியழகன் அனைவருமே இளைஞர்கள்தான். அவர்கள்தான் அரசியல் களத்திலும், போராட்டக் களத்திலும் முதன்மையாக நின்று பல இளைஞர்களை ஈர்த்தார்கள். கழகத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். அதுபோன்றுதான், இங்கே உள்ள நிர்வாகிகளும் இளைஞர்களை கட்சியில் ஊக்கப்படுத்த வேண்டும்.

கோடியில் இருந்து 7 ஆயிரம் பேர்

கோடிக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட பேரியக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். இந்த பொதுக்குழுவுக்கு அந்த கோடியில் இருந்து, 7 ஆயிரம் பேர் வந்திருக்கிறீர்கள். இது மாபெரும் மரியாதை. காலம் காலமாக கழகத்துக்கு உழைத்து, ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆகாமல் - ஒன்றியச் செயலாளர் ஆக முடியாமல் - நகரச் செயலாளர் ஆக முடியாமல் - நிர்வாகி ஆக முடியாமல், மறைந்தவர்கள்தான் கழகத்தில் அதிகம். தலைவர் கலைஞரை பக்கத்தில் நின்றுகூட பார்க்காமல் மறைந்தவர்கள் அதிகம். அண்ணா அறிவாலயத்தின் வாசல் படியைக்கூட மிதிக்காத உடன்பிறப்புகள் அதிகம்.

ஆனால், இத்தனை லட்சம் பேரில், 30 அமைச்சர்கள் - 150 சட்டமன்ற உறுப்பினர்கள் - 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் - 76 மாவட்டச் செயலாளர்கள் - 21 மாநகர செயலாளர்கள் - 160 நகர செயலாளர்கள் - 490 பேரூர் கழகச் செயலாளர்கள் - 936 ஒன்றிய செயலாளர்கள் - 236 பகுதி செயலாளர்கள் - 1,505 பகுதி வார்டு செயலாளர்கள் - 3,876 நகர வார்டு செயலாளர்கள் - 7,629 பேரூர் வார்டு செயலாளர்கள் - 12 ஆயிரத்தி 525 ஊராட்சி செயலாளர்கள் - 79 ஆயிரத்தி 962 கிளைச் செயலாளர்கள் - 68 ஆயிரத்தி 467 பூத் பொறுப்பாளர்கள் - பல ஆயிரம் சார்பு அணி நிர்வாகிகள் என்று இத்தனை பேருக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்புகளை வழங்கியிருக்கிறது. உங்களை வாழ வைத்த கழகத்தை நீங்கள் வாழ வையுங்கள்! இந்த இயக்கத்துக்கு உண்மையாக இருங்கள். இதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.

கூட்டணி முக்கியம்

நான் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்முடைய கூட்டணி! 2017 ஆம் ஆண்டு முரசொலி பவள விழாவில் நம்முடைய பயணம் தொடங்கியது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தல்களுக்கு தொடர்ந்ததாக வரலாறு இல்லை. நம்முடைய வெற்றிக் கூட்டணி வலுவாக தொடர்கிறது என்றால் அதுக்குக் காரணம், நம்முடைய கூட்டணி தோழர்களை நாம் மதித்து செயல்படுவதுதான்.

நம்முடைய கூட்டணித் தலைவர்களிடம் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து செயலாற்ற வேண்டும். சில இடங்களில் முரண்கள் இருந்தாலும், பேசி - விட்டுக்கொடுத்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் நம்முடைய வெற்றிப் பயணத்தை தொடர முடியும்" எனக் கூறியுள்ளார் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+