பெண்களின் உரிமைக்காக திமுக தொடர்ந்து பாடுபடும் - ஸ்டாலின்
சென்னை: திமுக பெண்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டத்தில் அவர் கூறியதாவது: 1971-ம் ஆண்டு திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று கருணாநிதி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் 184 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமர்ந்தோம். இதுவரை தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் ஆட்சி பொறுப்பில் இருந்திருந்தாலும் 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஒரே இயக்கம் திமுக தான். அதேபோல 89 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக பொறுப்பேற்றுள்ள கட்சி திமுக தான்.
அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பினை ஏற்ற பெருமை திமுகவிற்கு கிடைத்துள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியாக இருக்கும் பெருமையும் திமுகவிற்கு தான் கிடைத்துள்ளது. வெற்றி பெற்றாலும் சரி அல்லது தோற்றாலும் சரி இரண்டையும் ஒன்றாக கருதி, மக்களுக்கு பணியாற்றுவதில் இருந்து என்றைக்கும் திமுக பின்வாங்கியதே இல்லை. நமது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கு ஏராளமான இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகள் அதிகமாக கலந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் பெண்களின் உரிமையை பாதுகாக்கவும், அவர்களது முன்னேற்றத் திற்காகவும் பல சோதனைகளை, வேதனைகளை எல்லாம் சந்தித்து தனது பணிகளை மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்துதான் தந்தை பெரியார் அவர்களாக இருந்தாலும் சரி, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களாக இருந்தாலும் சரி, பேரறிஞர் அண்ணாவாக இருந்தாலும் சரி, இன்றைக்கு நம்மையெல்லாம் வழி நடத்திக் கொண்டிருக்கும் தலைவர் கருணாநிதி ஆனாலும் சரி அனைவரும் பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
பெண்கள் தங்களுடைய சொந்த கால்களில் நிற்க வேண்டும், யாருடைய தயவிற்காகவும் காத்திருக்கக் கூடாது என்பதற்காக 1989-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற மாபெரும் அமைப்பை முதன் முதலாக உருவாக்கி தந்தார் கருணாநிதி.
அதுமட்டுமல்ல, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கியதுடன், உள்ளாட்சி அமைப்புகளில் 33% இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்கும் சட்டத்தை இயற்றி, அதனை சட்டமன்றத்தில் நிறைவேற்றி தந்தார். திமுக பெண்களின் உரிமைக்காக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இதையெல்லாம் நீங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கு குறிப்பிடுகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications