ஆளுநரின் இந்தப் பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது: துரைமுருகன்
ஆளுநரின் இந்தப் பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நாமக்கல்லில் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்தினார். இதனை எதிர்த்து திமுக கட்சியினர் ஆளுநருக்குக் கருப்புக்கொடி காட்டினர்.

கருப்புக்கொடி காட்டியதற்காக கைது செய்யப்பட்ட திமுக தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவிக்கையில், மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கை இது என்று குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு உரிமை உள்ளது.
அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறுகையில், ஆளுநரின் பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது. அவர் எங்கு சென்றாலும் தொடர்ந்து கறுப்புக்கொடி காட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications