உங்களுக்குத் தெரியுமா?.. நம்ம 'அம்மா' ஒரு விவசாயி!
சென்னை: அதிமுகவின் இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்த வாழ்க்கைக் குறிப்பில் ஜெயலலிதா ஒரு விவசாயி என்று போட்டுள்ளனர்.
இதைப் பார்த்து எங்களுடன் நாற்று நட்டாயா, களை பறித்தாயா என்று எதிர்க்கட்சிக்காரர்கள் கிண்டலடிக்கும் வகையில் இந்த பயோடேட்டா அப்டேட் செய்யப்படாமல் உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா குறித்த அத்னை விவரங்ளையும் இதில் போட்டு வைத்துள்ளனர். அவர் வாங்கிய விருதுகள், பட்டங்கள், அவர் வகித்த பதவிகள் உள்ளிட்ட பலவற்றையும் இதில் இடம் பெற வைத்துள்ளனர்.

பிறந்த ஊர் மைசூர்
1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி மைசூரில் பிறந்தவர் முதல்வர் ஜெயலலிதா. மெட்ரிகுலேஷன் படிப்பு படித்துள்ளார்.

1972ல் கலைமாமணி..
1972 ஆம் ஆண்டு தமிழக அரசினால் "கலைமாமணி" விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" (டி.லிட்.) பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தால் "டாக்டர்" பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

அடுத்தடுத்து டாக்டர் பட்டம்
1993 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

பத்தாண்டின் சிறந்த பெண்மணி
2004 ஆம் ஆண்டு ஆசிய சபை விருதான "பத்தாண்டின் சிறந்த அரசியல் பெண்மணி" என்ற பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் அமைப்பு அழைப்பு விடுத்தது.

தங்கத் தாரகை
2004 ஆம் ஆண்டு, இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பாலின சமத்துவம் மற்றும் சமுதாயத்தில் நலிந்த பிரிவினரை பாதுகாத்தல் ஆகியவற்றில் சேவை புரிந்தமைக்காக, தங்கத் தாரகை விருது சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு குழுவினால் வழங்கப்பட்டது.

லேட்டஸ்ட் நியூஜெர்சி தீர்மானம்
2011 ஆம் ஆண்டு, இவருடைய மிகச் சிறந்த சேவை மற்றும் ஆளும் திறமையை பாராட்டியதோடு, தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இவரது சேவையைப் பாராட்டி அமெரிக்க நாட்டில் உள்ள நியு ஜெர்சி பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.

திருமணமாகாதவர்
குடும்பம் என்ற பகுதியில் திருமணமாகாதவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் - விவசாயம்
இவரது தொழிலாக விவசாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக அரசியல் ஈடுபாடு என்று தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் பொழுதுபோக்குகள்
ஜெயலலிதாவின் பொழுது போக்குகளாக படித்தல், இசை என்று இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எழுத்தாளர்
மேலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் இவர் எழுதிய பல கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழில் நான்கு முழு நீள நாவல்களும் பல சிறு கதைகளும் எழுதியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குதிரையேற்றம்.. டென்னிஸ்.. நீச்சல்
ஜெயலலிதாவுக்குப் பிடித்த விளையாட்டுக்களாக கிரிக்கெட், டென்னிஸ், நீந்துதல், குதிரை ஏற்றம், கூடைப்பந்து, சதுரங்கம், உடற்பயிற்சி விளையாட்டுகள் ஆகியவை
குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்மொழித் தலைவர்
ஜெயலலிதா ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வல்லவர். அத்துடன் மலையாள மொழியையும் நன்கு புரிந்து கொள்ளும் திறமை உடையவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications