உருகிய உதயச்சந்திரன்.. "காப்பாத்துங்க"..கையை பிடித்து, டாக்டர் சொன்ன சொல்".. டக்கென பார்த்த ஸ்டாலின்
சென்னை: தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை காப்பாற்றுவதற்கு வேட்டையாடும் விலங்குகளிடம் இருந்து தன்னுடைய கன்றுகளை பாதுகாக்கும் தாய் பசு போல, குட்டிகளை பாதுகாக்கும் தாய் மான் போல, தமிழ்த்தாயை பாதுகாக்க காலம் காலமாக பாடுபட்டு கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் நமக்கு அவசியம் தேவை என்று அரசு முதன்மைச் செயலர் உதயச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் ஒடிசா மாநில முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழியல் இந்தியவியல் ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய "ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, நூலினை வெளியிட முதல் பிரதியை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்..

பூரிப்பு - பெருமிதம்: முதல்வர் அப்போது பேசும்போது, " சங்க இலக்கியங்களை திராவிட இயக்க மேடைகளில் முழங்கியபோது, இதெல்லாம் இலக்கியம்தானே, வரலாறு இல்லையே என்று பலரும் நிராகரித்தார்கள். அந்த சொல்லியல் அனைத்துக்கும் இப்போது தொல்லியல் ஆதாரம் கிடைத்திருக்கிறது. அதைத்தான் பாலகிருஷ்ணன் அளப்பரிய பணியாக செய்து முடித்திருக்கிறார். சிந்து சமவெளி பயன்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என்பதை இந்த ஆய்வுகள் கூறுகின்றன" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு முதன்மைச் செயலர் உதயச்சந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழர்களுக்கு என்று தனிக் குணம் உண்டு. அப்படி உண்டா என்று பலரும் கேள்வி எழுப்புவது உண்டு. தமிழர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்...

சோதனைகள் : யோசித்து இதை பற்றி லிஸ்ட் போட்டு பார்த்தால், அதில் முதன்மையாக தோன்றுவது, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுக்கு எப்பொழுது எல்லாம் சோதனைகள் வருவதோ, அப்போது உரத்த குரல் கொடுப்பது தமிழர்களின் இயல்பு.. கடைக்கோடி தமிழர்கள் முதல் உலக தமிழர்கள் வரை ஒரே நேர்க்கோட்டில் சிந்தித்து செயல்படுவது மற்றவர்களுக்கு அதிசயமாக இருக்கலாம். இப்படி ஒரே அலைக்கோட்டில், ஒரே அலை வரிசையில் சிந்திப்பது இது நிகழ்கால மானுடவியல் அதிசயமாக கூட இருக்கும்....
10 ஆண்டுகளுக்கு முன்பு, நிதித்துறையில் பணியாற்றி கொண்டிருந்தபோது, மதுரையிலிருந்து என்னுடைய இலக்கிய நண்பர் என்னை தொலைபேசியில் அழைத்தார். மதுரைக்கு அருகில் அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது பார்க்க வருமாறு அழைத்தார். நான் இதற்காகவே விடுப்பு எடுத்து கொண்டு சென்றேன். அப்போதுதான் அது முதல் முறையாக கீழடி என்று தெரிந்தது.. என்னுடைய அப்பா கடுமையாக நோய் வாய்ப்பட்டு கோவையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆபரேஷன் : ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாய நிலை வந்துவிட்டது.. 5 மணி நேரம் ஆபரேஷனும் நடந்தது.. மயக்கம் தெரிந்த பிறகு, நான் என் அப்பாவிடம் சென்று நலம் விசாரித்தேன்... அதற்கு பிறகு வெளியே வந்தபின்பு, டாக்டர் என் கையை பிடித்து கொண்டு "இந்த இடத்தில் கேட்கிறேன்" என்று பேச்சை ஆரம்பித்தார். எனக்கோ ஒரே பதட்டமாக போய்விட்டது.. அப்போது மருத்துவர் என்னிடம், தஞ்சை கோயிலில் தமிழ் கல்வெட்டுக்கள் காணாமல் போகுது. அதனை காப்பாற்ற முடியாதா? என்று கேட்டார்..
4 வருடம் கழித்துதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது... தந்தையை காப்பாற்ற துடிக்கும் மகனுக்கும், பழத்தமிழ் பெருமையை காப்பாற்ற துடிக்கும் அந்த மருத்துவருக்கும் பெருத்த வேறுபாடு இல்லை என்பது.. இப்பொழுது புரிந்தது, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை காப்பாற்றுவதற்கு வேட்டையாடும் விலங்குகளிடம் இருந்து தன்னுடைய கன்றுகளை பாதுகாக்கும் தாய் பசு போல, குட்டிகளை பாதுகாக்கும் தாய் மான் போல, தமிழ்த்தாயை பாதுகாக்க காலம் காலமாக பாடுபட்டு கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் நமக்கு அவசியம் தேவை..
சங்க இலக்கியங்களிலிருந்து, எல்லா இலக்கியங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம்.. வன்னி மரம் சிந்து நாகரீகத்தில் செழித்து வளர்ந்து இருந்தது. அது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் இடம் பெற்று இருந்திருக்கிறது. சேவல் சண்டை சிந்து நாகரீகத்தில் இருந்து இருக்கிறது" என்று தன் உரையில் உதயச்சந்திரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications