தாலி ஈரத்துடன்.. ராணிப்பேட்டையில் சீறிய அனுசுயா..ஓபனா சொன்ன மாப்பிள்ளை.. அரக்கோணம் போலீசுக்கு தலைவலி
ராணிப்பேட்டை: இளம்பெண்ணை ஏமாற்றிய இன்ஜினியருக்கு போலீஸ் வலை விரித்துள்ளது.. இது தொடர்பாக மணப்பெண்ணின் போராட்டம் 16வது நாளாக தொடர்வதால், ராணிப்பேட்டையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. என்ன நடந்தது?
காதலுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர்.. 29 வயதாகிறது.. இன்ஜினியரான இவர், பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. இதே கம்பெனியில் பெங்களூரை சேர்ந்த அனுசுயா என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் 29 வயதாகிறது. இவர்கள் இருவருமே கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

மாயம்: இந்த விஷயம் 2 குடும்பத்தினருக்கும் தெரியவந்ததையடுத்து, காதல் ஜோடிக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.. இதற்காக கடந்த 15ம் தேதி திருமணத்தை குறித்தனர்.. அதன்படியே அன்றைய தினம், திருத்தணியில் ஒரு மண்டபத்தில், திருமண ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன.. உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என திரண்டு வந்த நிலையில், மண்டபமே பரபரப்பாக காணப்பட்டது.
ஆனால், கரெக்டடா தாலி கட்டவிருந்த நேரத்தில் மாப்பிள்ளை ஸ்ரீதர் மாயமாகிவிட்டார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் கல்யாண மண்டபம் உட்பட எங்கெங்கோ தேடியும், ஸ்ரீதர் கிடைக்கவில்லை.. இறுதியில், சாதியை காரணம் காட்டி மணமகன் ஸ்ரீதர் மாயமானதாக மணப்பெண் அனுசியா போலீசில் புகார் தந்தார். இந்த புகாரின் பேரில் திருத்தணி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, மாப்பிள்ளை ஸ்ரீதரை தேடி வந்தனர்.
தனிப்படை: கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் ஸ்ரீதர் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.. எனவே, அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கண்டுபிடித்து, திருத்தணிக்கு அழைத்து வந்தனர்.. டிஎஸ்பி கந்தன் முன்னிலையில், ஸ்ரீதர், அனுசுயா இருவருக்குமே ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு தரப்பட்டது..
இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்ததையடுத்து, போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மறுநாளே ஸ்ரீதர் மறுபடியும் மாயமாகிவிட்டார்.. அனுசுயாவை கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்றும் ஓபனாகவே சொல்லிவிட்டார்.
போராட்டம்: இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுசுயா, மறுபடியும் டிஎஸ்பி அலுவலகம் வந்து, "எனக்கு நீதி கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. காதலனுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஒருவேளை, அவர் மறுத்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.. காதலனை திருமணம் செய்ய அனுசுயாவின் போராட்டம் இன்றுடன் 16வது நாட்களாக தொடர்ந்துள்ள நிலையில், திருத்தணியில் பரபரப்பு தென்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications