யாருக்கு என்ன துறைனு சரியாக ஒதுக்கிய விஜய்! விஜய்பாஸ்கர், மா.சு. வரிசையில் அருண்ராஜுக்கு மருத்துவம்!
சென்னை: மருத்துவம் பயின்று ஐஆர்எஸ் பணியில் சேர்ந்து அரசியலுக்கு திரும்பி அமைச்சரான அருண்ராஜுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் இது மா.சுப்பிரமணியத்திடம் இருந்தது. அதிமுக ஆட்சியில் மருத்துவத் துறை சி.விஜயபாஸ்கரிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களாக இன்றைய தினம் விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றார்கள்.

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், பி வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றார்கள்.
பதவியேற்ற 9 + முதல்வர் விஜய் ஆகியோருக்கு என்னென்ன துறைகள் என்பது குறித்து அதிகார்ப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் அருண்ராஜுக்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த அருண் ராஜ் என்பதை பார்க்கலாம். அருண்ராஜ், சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஆவார். கடந்த 2009-ஆம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருமான வரி துறை அதிகாரியாக சென்னையில் பணியை தொடங்கினார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி நண்பர் வீட்டில் ரெய்டு நடத்தி ரூபாய் 70 கோடி பணம் கைப்பற்றிய அதிகாரிகள் குழுவில் இருந்தவர். கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபை தேர்தலின்போது பீகார் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட அருண்ராஜ், அங்கு பாட்னாவில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்தார். மே மாதம் தனது அரசு பணியை ராஜினாமா செய்தார். மத்திய அரசுப் பணி அதிகாரி என்பதால் இவரது விருப்ப ஓய்வுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த போது கூட அவருடன் இவர் நெருக்கம் காட்டினாராம். ஆனால் அவர் கட்சி தொடங்கவில்லை என அறிவித்ததும் அருண்ராஜ் ஏமாற்றமடைந்தார் என சொல்லப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு நடிகர் விஜய், மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கூட விஜய் நெய்வேலி படப்பிடிப்பு இருந்தார். அங்கு ரெய்டுக்கு போனவர் அருண்ராஜ்தான். அந்த சமயத்தில் விஜய்க்கு எதிரான பிரச்சனைகளை அருண்ராஜ்தான் சரி செய்து கொடுத்தாராம். அது முதல் விஜய்யுடன் நல்ல நட்பில் இருந்து வருகிறாராம்.
விஜய் கட்சி தொடங்கிய காலம் முதலே அவருடன் அருண் நெருக்கம் காட்டி வருகிறாராம். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய அவர்தான் உதவினாராம். இதனையடுத்து தமிழ்நாடு திரும்பிய அருண்ராஜ், தீவிர அரசியலில் களமிறங்கினார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அருண்ராஜ், அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருண்ராஜ், விஜய்யின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்து வருகிறார். நீண்ட காலமாகவே விஜய்க்கு ஆலோசனைகளை வழங்கி வரும் அருண் ராஜ், 2026 சட்டசபைத் தேர்தலில் நாமக்கலில் போட்டியிட்டு வென்றார்.
இவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்ட நிலையில் அவர் படித்த மருத்துவத் துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது போல் விருதுநகரை சேர்ந்த கீர்த்தனாவுக்கு தொழில்துறை கொடுக்கப்பட்டுள்ளது. ராஜ்மோகனுக்கு தமிழ் வளர்ச்சி துறை வழங்கப்பட்டுள்ளது. அவரவருக்கேற்ப துறைகளை விஜய் ஒதுக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications
