"மோடிக்காக எங்களுக்கு ஓட்டு போட வேணாம்னு சொல்லிடாதீங்க".. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
சென்னை: “மோடிக்காக எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம்னு சொல்லிடாதீங்க மா.. எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த ரூ. 57 ஆயிரத்து 800 ஊதியமாக வழங்க வேண்டும், 12 மாதங்கள் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு கலைக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. திண்டுக்கல்லில் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக் கல்லூரி முன்பாக 3வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், அங்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கௌரவ விரிவுரையாளர்களிடம் கலகலப்பாகப் பேசினார். அப்போது, “மோடிக்காக எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம்னு சொல்லிடாதீங்க மா.. எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்” எனக் கூறினார் திண்டுக்கல் சீனிவாசன்.
பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து வரும் நிலையில், பொதுவெளியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இப்படிப் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி களத்தில் ஒருங்கிணையவில்லை என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் சூழலில் அதிமுக மூத்த நிர்வாகியே இப்படி பேசியிருப்பது விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “திமுக ஆட்சியைத் தவிர வேறு யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லி ஆட்சிதான்” என்ற முதல்வரின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “டெல்லி ஆட்சியாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. இங்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் வேண்டும், மேலும் 10 ரயில்கள் வேண்டும் என்றால் டெல்லியில்தானே கேட்க வேண்டும்? இவர்கள் அம்மாவிடமா போய்க் கேட்க முடியும்? மத்திய அரசாங்கத்திடம்தானே எனக் கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications