எப்படி ஜெயிப்பே நீ.. டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மு.க.அழகிரி அதிரடி சவால்!
ராஜபாளையம்: உனது சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணைத்தான் நான் திருமணம் செய்துள்ளேன். தேர்தலுக்குப் பின் பார். எப்படி பாதிப்பு என்று தெரியும். நீ 3வது இடம் பெற்றாலே இது பெரிய விஷயம். எனது சொந்தங்கள் அங்கு நிறைய உள்ளனர். நிச்சயமாக உனக்கு பாடம் புகட்டுவேன் என்று தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு மு.க.அழகிரி பகிரங்கமாக சவால் விட்டுள்ளார்.
இன்று காலையில் அழகிரியை அவரது மதுரை வீட்டில் வைத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் ராஜபாளையம் புறப்பட்டு வந்தார் அழகிரி.
அங்கு நடந்த காது குத்து விழாவில் கலந்து கொண்டார் அழகிரி. அழகிரி வந்ததால் அங்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு விட்டனர். நிகழ்ச்சியில் படு உற்சாகத்தோடு காணப்பட்ட அழகிரி, பின்னர் பேசியபோது பேச்சில் அனல் பறந்தது.
அழகிரியின் பேச்சிலிருந்து....

வியாபாரியைப் போய் கட்சியில் சேர்த்தேனே...
யாரோ இருவரால் விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க சிதைந்து வருகிறது. இப்படி ஒரு வியாபாரியை கட்சியில் கொண்டுவந்து சேர்த்தது நான் செய்த தவறுதான். அவர் இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் கட்சியில் இருப்பாரா என்பது தெரியாது.

வியாபாரி ரத்தினவேலுக்கு என்ன சம்பந்தம்
இந்த வியாபாரி ரத்தினவேல் என்பவரை விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக கொண்டு வந்துள்ளார். இந்த ரத்தினவேலுவுக்கும் கட்சிக்கும் சம்பந்தமே கிடையாது.

நண்பராக இருந்தால் பதவி தந்து விட முடியுமா...
ஆனால், ரத்தினவேல் எனக்கு நல்ல நண்பர். அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தவர் என என்னைப்பற்றி புத்தகமே வெளியிட்டவர் அவர். ஆனால், நண்பர் என்பதற்காக ஒருவரை நான் எம்.எல்.ஏ. ஆக்க முடியுமா? எம்.பி. ஆக்க முடியுமா?

தேவர் நின்று வென்ற தொகுதி இது...
கடந்த 1957ல் சுயேட்சையாகப் போட்டியிட்டு 1.20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றவர் முத்துராமலிங்கத்தேவர். அப்போது திமுகவில் நாமக்கலில் ஏ.வி.கே.சம்பத், திருவண்ணாமலையில் தர்மலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர்.

இப்படியா வேட்பாளரைத் தேர்வு செய்வது...
முன்பெல்லாம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு செய்யப்படும்போது அவர் கட்சியில் ஆற்றிய பணிகள், வகித்த பொறுப்புகள், செய்த தியாகங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

சும்மா உட்கார்ந்திருக்கிறாரே தலைவர்
ஆனால், இப்போது நடந்துள்ள வேட்பாளர் தேர்வில் தலைவர் சும்மாதான் அமர்ந்திருக்கிறார்.

பக்கத்தில் இருப்பவர் காசு இருக்கா என்கிறார்
அவருக்கு அருகில் இருப்பவர் (மு.க.ஸ்டாலினைக் குறிப்பிடுகிறார்) வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்தவரிடம் உன்னிடம் எவ்வளவு காசு இருக்கிறது எனக் கேட்கிறார்.

நெல்லை வேட்பாளரை யாருக்காவது தெரியுமா...
கட்சித் தலைவருக்குத் தெரியாமலேயே திமுகவில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இப்போது திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுபவர் யார் என்று யாருக்காவது தெரியுமா? அவர் பெயர்கூட நினைவில்லை. கோயிலில் அறங்காவலராக இருந்தவர் அவர். யாரோ சிலருக்கு சொந்தக்காரராம். அதனால் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெரிய முதலை வாயில் சிக்கிக் கொண்டு விட்டார்
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய முதலை வாயில் சிக்கிக் கொண்டுவிட்டார். பாவம் அவர். கட்சியில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர் பிச்சாண்டி.

அவர்களுக்குத்தான் கருணாநிதி என்றாலே பிடிக்காதே...
திருவண்ணாமலையில் அவரது தம்பி கருணாநிதிக்கு சீட்டு கேட்டபோது கொடுக்க மறுத்துவிட்டார்கள். அவர்களுக்குத்தான் கருணாநிதி என்றாலே பிடிக்காதே.

தலைவரையே நீக்கி விடுவார்கள்
இரு நாள்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு அறிக்கை பார்த்தேன். மதுரை வரும் திமுக தலைவர் எனது வீட்டுக்கு வந்தால் தலைவரையே கட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள்போல.

இன்னும் என்னெல்லாம் செய்யப் போகிறார்களோ...
இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்களோ. கலைஞரையும் கட்சியையும் காப்பாற்றத்தான் நான் வந்திருக்கிறேன்.

என்ன சொல்லியிருக்க வேண்டும் கிருஷ்ணசாமி...
திமுகவிலிருந்து மு.க.அழகிரி விலக்கப்பட்டதால் ஏதாவது பாதிப்பு இருக்குமா என தென்காசி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அவர் என்ன பதில் கூறியிருக்க வேண்டும்? இது உட்கட்சி பிரச்னை. இதுபற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லையெனக் கூறியிருந்தால் அவர் உண்மையிலேயே மதிக்கத்தக்கவர்.

அதெப்படி நீ ஜெயிப்பே
ஆனால், திமுவிலிருந்து மு.க.அழகிரியை விலக்கியதால் திமுகவுக்கும் எந்த பாதிப்பும் இல்லை, எனக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார். எப்படி பாதிப்பில்லாமல் போய்விடும்.

தேர்தலுக்குப் பின் பார்..
உனது சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணைத்தான் நான் திருமணம் செய்துள்ளேன். தேர்தலுக்குப் பின் பார். எப்படி பாதிப்பு என்று தெரியும்.

சரியான பாடம் புகட்டுவேன் பார்...
நீ 3வது இடம் பெற்றாலே இது பெரிய விஷயம். எனது சொந்தங்கள் அங்கு நிறைய உள்ளனர். நிச்சயமாக உனக்கு பாடம் புகட்டுவேன்.

முதலில் தலைவர்.. பிறகுதான் ஆதரவு...
மதுரையில் வைகோ என்னைச் சந்தித்தார். நாங்கள் பழைய விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் பேசினோம். பேசி முடித்துப் புறப்படும்போது எனக்கு ஆதரவு கொடுங்கள் என வைகோ கேட்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவு கேட்டனர். ஆனால், தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து கூறுவதாகத் தெரிவித்தேன். முதலில் கட்சியையும் தலைவரையும் காக்க வேண்டும். பின்னர் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பேன் என்றார் அழகிரி.
அழகிரியின் இந்த அனல் பறந்த பேச்சாலும், டாக்டர் கிருஷ்ணசாமியை அவர் சாதி வாக்குகளைச் சொல்லி ஜெயிச்சிருவியா என்று சவால் விட்டுப் பேசியதும் பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications