சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற விடமாட்டேன் - கொந்தளிக்கும் ராமதாஸ்
சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவது குறித்து வழக்கறிஞர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் செல்வேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்ற முயற்சி நடந்தால் அதனை எதிர்த்து பாமக உச்ச நீதிமன்றம் செல்லும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில், கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தும், அம்மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் ரூ.100 கோடி அபராதம் மட்டுமே கட்ட வேண்டும். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இப்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் சில வசதிகள் கிடைக்காது. சசிகலா ஒரு குற்றவாளிதான் அவரை அப்படித்தான் நடத்துவோம் என்று பெங்களூரு சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சசிகலா ஆலோசனை
சசிகலாவிற்கு உடல்நலக்குறைவு பாதிப்பு இருப்பதாகவும், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் ஆகியவற்றை கூறி சென்னை சிறைக்கு மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக, தனது வழக்கறிஞர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. டிடிவி தினகரனும் இது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறாராம்.

சென்னைக்கு சிறைக்கு மாற்றமா?
இருமாநில சிறைத்துறை அதிகாரிகள் பரஸ்பரமாக ஒப்புக்கொண்டால் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலாவை சென்னை சிறைக்கு மாற்றுவது குறித்து வழக்கறிஞர்களும், அரசியல் கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
|
ராமதாஸ் எதிர்ப்பு
இந்த செய்தி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதனை அனுமதிக்க முடியாது என்றும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை பாமக அணுகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வரிசை கட்டும் வழக்குகள்
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் ஆச்சாரியாவும், சசிகலாவை தமிழகத்திற்கு மாற்ற முயற்சி செய்தால் வழக்கு தொடுப்பேன் என்று கூறியுள்ளார். இப்போது சசிகலாவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடப்போகிறார் டாக்டர் ராமதாஸ். பரப்பன அக்ரஹாராவில் இருந்து புழலுக்கு மாறுவாரா சசிகலா?












Click it and Unblock the Notifications