முட்டிக்கொண்ட காங்கிரஸ் - அதிமுக வேட்பாளர்கள்.. தென்காசியில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
தென்காசி: தபால் வாக்கு மறுஎண்ணிக்கை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், அதிமுக - காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனி நாடார், அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து செல்வமோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பதிவான வாக்குகள் மற்றும் அறிவிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாகவும் தபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் மீண்டும் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என தீர்ப்பு அளித்தார். தபால் வாக்குகளை பதிவு செய்தது மற்றும் எண்ணியதில் குளறுபடிகள் நடந்துள்ளது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த நீதிபதி, 10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு ரூ.10 ஆயிரத்தை தொடர்ந்த தேர்தல் அதிகாரி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று 200 போலீசாரின் பாதுகாப்புக்கு மத்தியில் மறுவாக்கு எண்ணிக்கைதொடங்கியது. மாவட்ட ஆட்சியர் வரும் வரை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. அவர் வந்த பிறகு 10.20 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் பாண்டியன் நீதிமன்ற உத்தரவின்படி மறுவாக்கு எண்ணிக்கை நடக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
தேர்தலில் 13 சி பெட்டியில் பதிவான வாக்குகளை மட்டும் தேர்தல் அதிகாரிகள் எண்ண முயற்சிப்பதாகவும், 3 பெட்டிகளையும் எண்ண வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடனே நிறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அவரிடம் சமாதானம் செய்த பிறகு 12.10 மணியளவில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த நிலையில் அடுத்த 30 நிமிடங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளது. வாக்குப்பெட்டி கவரில் இருந்த கையெழுத்தை பார்த்து செல்லாத வாக்கு என்று கணக்கெடுக்க அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் கோரிக்கை விடுத்தார். இதற்கு காங்கிரஸ் வேட்பாளர் எதிர்ப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் இருவரிடமும் பேச்சுவார்த்தை செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications