தென்காசி அருகே 656 ஏக்கரில் கிராஃபைட் வெட்டி எடுக்க மின் ஏலம்! மத்திய அரசுடன் மோதத் துணிந்த மதிமுக!
தென்காசி: தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிராஃபைட் வெட்டி எடுப்பதற்கு விடப்பட்ட மின் ஏலத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கிராஃபைட் எனும் கனிமத்தை எடுக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடா விட்டால்,மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். நியூட்ரினோ ஆய்வகம், மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன், கெயில் எரிவாயு குழாய் என பல விவகாரங்களில் வைகோ எவ்வளவு வீரியமாக போராடினாரோ அதேபோல், கிராஃபைட் ஏலம் விவகாரத்தில் துரை வைகோ மிகவும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது;
''கிராஃபைட் உள்ளிட்ட பல்வேறு வகையான கனிமங்களை எடுக்க மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் அறிவிப்பு ஒன்றிய சுரங்க அமைச்சகத்தின் இணையதளத்தில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது அதிர்ச்சியளிக்கின்றது.
கிராஃபைட் எனும் கனிமத்தை எடுக்க மின் ஏலம் கோரும் டெண்டர் அறிவிப்பில் தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஒன்றியம் திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குறிஞ்சாங்குளம் கிராமம் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிஞ்சாங்குளம் கிராமப் பகுதிகளில் சுமார் 656.46 ஏக்கர் நிலப்பரப்பில் கிராஃபைட் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, மின் ஏலம் விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெள்ளக்கால் பகுதி, நொச்சிப்பட்டி, வேலம்பட்டி வடக்கு, இலுப்பக்குடி, மண்ணடிப்பட்டி, மாருதிப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் வெவ்வேறு வகையான கனிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளுக்கும் மின் ஏலம் விடப்பட்டுள்ளது.
கிராஃபைட் கனிமத்தை எடுக்க முதலில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சுரங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இதன்மூலம், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட கனிம வளங்கள் கண்டறியப்பட்டு உள்ள கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இதன்மூலம் பாதிப்படையும்.
கிராஃபைட் ஒரு கடினமான கனிமம். இதை உடைத்து எடுப்பதற்கு வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்படும். இதனால் ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எழும். சுரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் இடிந்து விழும். கிராஃபைட் கனிமம் எடுப்பதால் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எழுவதுடன் மனிதர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கிறோம், மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம், கெயில் எரிவாயு குழாய் பதிக்கிறோம் என பல்வேறு நாசக்கார திட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையினால் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த திட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களையும், வழக்குகளையும் தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொண்டு இருக்கிறார்கள்.
கனிமங்களை எடுப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. மனிதர்களையும், சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவரும் இவ்வகையான திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு மக்களின் எதிர்கால பாதிப்புகளை உணர்ந்து இத்திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும்.
தென்தமிழ்நாட்டில், விவசாய பூமியாக உள்ள திருவேங்கடம் வட்டம் குறிஞ்சாங்குளம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகளின் கருத்துகளை கேட்டறியாமல், மாவட்ட நிர்வாகத்தையோ, தமிழக அரசையோ கலந்து ஆலோசிக்காமல் ஒன்றிய அரசின் சுரங்கத்துறை தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. கிராஃபைட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க தமிழகத்தில் மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் முயற்சியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தொடக்கத்திலேயே இம்முயற்சியை ஒன்றிய அரசு கைவிடா விட்டால், மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் மக்களை திரட்டி போராடும் சூழல் உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications