எம்ஜிஆரின் மீனவ நண்பன் பட பாட்டுப்பாடி மீனவர்களுக்கு நிதி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி
கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிவாரண உதவியை ஆர்.கே. நகரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
சென்னை: சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல் மோதிய விபத்தில் பல ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் வாழ்வாதாரம் பாதித்த மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிவாரண உதவி எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இன்று ஆர். கே. நகரில் நடைபெற்ற விழாவில் மீனவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவியை வழங்கினார்.
தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்சிகளில் கலந்து கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். மீனவர்களுக்கு இடைக்கால நிவாரண நிதியை வழங்கினார்.

மீனவர்களின் நலன்
ஆர்.கே. நகரில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், 'தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் தவிக்க வைத்தான்' என்று மீனவர்களுக்காக எம்ஜிஆர் பாடியது உண்மையாகி வருகிறது. மீனவர்களைக் காக்க ஜெயலலிதாவின் வழியில் தமிழக அரசு செயல்படும் என்றார்.

அதிமுக அரசு
ஜெயலலிதா ஆட்சியில்தான் மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியை ரூ.5 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தியது. 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் மீனவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது என்று தெரிவித்தார். மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய முதல்வர், மீனவர்களின் பிரச்சினை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

115 கடிதங்கள்
இலங்கைக் கடற்படையினால் மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை காக்க முதல்வராக இருந்த ஜெயலலிதா 115 கடிதங்களை பிரதமருக்கு எழுதியதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, இதனால் பல மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறினார். மீனவர்களின் நிவாரணத்தையும் ஜெயலலிதா உயர்த்தியதாக தெரிவித்தார்.

நிவாரண நிதி
சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல் மோதிய விபத்தில் கடலில் எண்ணெய் கொட்டி வாழ்வாதாரம் பாதித்த 30 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிவாரண உதவியை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

3 நாட்கள் சுற்றுப்பயணம்
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான தனது சுற்றுப் பயணத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கவுள்ளார்.
மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் முதல்வர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications