நடுக்கடலில் சுற்றி வளைத்த இலங்கை கடற்படை.. 8 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு! அதிகாலையில் பரபரப்பு
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. மேலும், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக சொல்லி 8 மீனவர்களையும் இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகவே நடந்து வருகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும் என்பதைத் தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தினாலும் கூட இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் அவர்கள் இரணை தீவு அருகே மீன் பிடித்து வந்ததாகவும் அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மொத்தம் 8 மீனவர்களைச் சிறை பிடித்துள்ள இலங்கை கடற்படை அவர்களை காங்கேசன் துறை துறைமுகத்திற்கும் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மீனவர்கள் சிறைபிடிப்பு
அதாவது இன்று அதிகாலை காலை 3 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை, அவர்களை விரட்டி அடித்ததாக சொல்லப்படுகிறது. கடலில் அதிகாலையில் காற்று வேகமாக வீசிக் கொண்டு இருப்பதால் நடுக்கடலில் வைத்தே சிறை பிடிக்கப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
காற்றின் வேகம் குறைந்த பிறகு அவர்கள் காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனத் தெரிகிறது. பொங்கலுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் வைத்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications