5 மாநில தேர்தல் மத்திய அரசுக்கு தக்க பாடம் புகட்டட்டும்.. ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதநேயமற்ற முறையில் மக்கள் மீது பொருளாதாரத் தாக்குதலை நடத்தி வருகிறது மத்திய அரசு. மீண்டும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இந்த செயலுக்கு 5 மாநிலத் தேர்தல் தக்க பாடம் புகட்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.06 உயர்த்தப்பட்டு ரூ.61.64 ஆகவும், டீசல் விலை ரூ.3.02 உயர்த்தப்பட்டு ரூ.51.78 ஆகவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கதாகும்.

Election will teach lesson to central government: Ramadoss

கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன்பயனை முழுமையாக மக்களுக்கு அளிக்காத எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும், விலை அதிகரிக்கும் போது மட்டும் கூடுதல் சுமையை மக்கள் மீது சுமத்துகின்றன. உதாரணமாக ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்த போதிலும் கடந்த மாதம் 17 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 பைசாவும், டீசல் விலை 1.33 ரூபாயும் மட்டுமே குறைக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பகுதியில் கிட்டத்தட்ட அதே அளவு தான் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது என்ற போதிலும், இரு வாரங்களுக்கு முன் குறைக்கப்பட்டதை விட இரு மடங்கு அளவுக்கு விலை உயர்த்தப்பட்டிருப்பது மிகப்பெரிய அநீதி ஆகும். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல் விலை கடந்த 44 நாட்களில் லிட்டருக்கு ரூ. 5.57 உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல், டீசல் விலை கடந்த இரு மாதங்களில் லிட்டருக்கு ரூ. 6.16 அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு நினைத்தால் இந்த விலை உயர்வின் சுமையை தாமே ஏற்றுக்கொண்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். இது மத்திய அரசின் கடமையும் கூட. இதனால் மத்திய அரசுக்கு எந்த சுமையோ, நெருக்கடியோ ஏற்படாது.

ஏனெனில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது அதன் பயனை நாட்டு மக்களுக்கு அளிக்காமல், கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான கலால் வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,46,838 கோடி கூடுதல் வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது. இப்போது கலால் வரியை ஓரளவு குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாய் 20 முதல் 25 விழுக்காடு வரை குறையுமே தவிர, ஒரு போதும் இழப்பு ஏற்படாது. ஆனால், ஏழை மக்கள் நலனில் அக்கறையில்லாத, வருவாய் ஈட்டுவதில் மட்டும் அக்கறை காட்டி வரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு இதைச் செய்வதற்கு கூட மனம் வரவில்லை. அந்த வகையில் பார்த்தால் இது மக்கள் மீது நடத்தப்பட்ட மனிதநேயமற்ற பொருளாதாரத் தாக்குதல் ஆகும்.

கடந்த இரு மாதங்களில் அடுத்தடுத்து 4 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டதாலும், தமிழகத்தில் சாலை பயன்பாட்டுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதாலும் சரக்குந்து வாடகை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் இப்போது மீண்டும் டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது சரக்குந்து கட்டணம் மேலும் உயர்த்தப்படுவதற்கு தான் வழிவகுக்கும். இதன் விளைவாக பாலில் தொடங்கி காய்கறிகள் வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரும். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் துன்பங்கள் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையாது.

இதையெல்லாம் உணர்ந்து பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், தங்கள் மீது பொருளாதாரத் தாக்குதல் நடத்திய மத்திய அரசுக்கு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பொதுமக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+