குழியில் விழுந்த குட்டி யானை... பாசத்தால் தவித்து கடுமையாக போராடி மீட்ட யானைகள்!
களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் குழிக்குள் விழுந்த குட்டி யானையை மற்ற யானைகள் பாசபோராட்டம் நடத்தி மீட்ட காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.
நெல்லை மாவட்டம் களக்காடு மலை அடிவாரப்பகுதியில் கடந்த இரு மாதங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. பகல் நேரங்களில் மலை அடிவாரங்களில் யானைகள் தங்குகின்றன. இரவு தொடங்கியதும் விளை நிலங்களில் புகும் காட்டு யானைகள் தென்னை, முந்திரி, வாழை மரங்கள் மற்றும் விவசாய பயிர்களை அழித்து நாசம் செய்து வருகின்றன.
இதனால் விவசாயிகள் சொல்ல முடியாத வேதனையில் தவித்து வருகின்றனர். இதையடுத்து வனத்துறையினர் யானைகள் புகாமல் இருக்க ஊருக்குள் அகழி தோண்டியுள்ளனர். இந்நிலையில் அதிகாலையில் களககாடு-சேரன்மகாதேவி சாலையில் உள்ள பூதத்தான்குடியிருப்பு கிராமத்திற்கு மேற்கே மலை அடிவாரத்தில் காட்டு யானைகளின் பிளிறல் கேட்கவே பொதுமக்கள் பீதியடைந்தனர்.
அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது வனத்துறையினர் தோண்டிய குழியில் குட்டி யானை ஓன்று விழுந்து கிடந்தது. அது வெளியே வர முடியாமல் அங்கும் இங்கும் குழிக்குள் தவித்து கொண்டிருந்தது. சுற்றிலும் பல யானைகள் சூழ்ந்து நின்றிருந்தன. இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் களக்காடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
குட்டியை மீட்க பொதுமக்கள் முயன்ற போது அருகில் மற்ற யானைகள் அவர்களை துரத்தின. யானைகள் தொடர்ந்து பிளறியதால் மேலும் பல யானைகள் காட்டுக்குள் வர தொடங்கின. அவை குழிக்குள் விழுந்த குட்டியை நீண்ட நேரம் கடுமையாக போராடி ஒரு வழியாக மீட்டு சென்றன.
வனத்துறையினர் வருவதற்கு முன்பே குட்டியை யானைகள் மீட்டு சென்றதால் அவர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் இரவில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே தவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
