காந்தியை கொன்ற, காமராஜரை கொல்ல முயன்ற பாஜகவுடன் தமாகா பேச்சுவார்த்தையா?- ஈவிகேஎஸ் இளங்கோவன் வேதனை
சென்னை: மகாத்மா காந்தியை கொன்ற, காமாராஜரை கொல்ல முயற்சித்த பாரதிய ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றால் அதைவிட பெரிய கொடுமை எதுவும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். காந்தியை கொன்ற, காமராஜரை கொலை செய்ய முயற்சித்த பாஜகவினருடன் தமாகாவினர் பேச்சுவார்த்தை நடத்துவது என்றால் அவர்களது தேசிய உணர்வு கேள்விக்குள்ளாகிறது. இதைவிட பெரிய கொடுமை எதுவுமே இல்லை.

சோனியா காந்தியின் அழைப்பு போல ஏற்று தாய்வீடான காங்கிரஸ் கட்சிக்கு ஜி.கே.வாசன் திரும்ப வேண்டும். தமாகாவினர் காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப வேண்டும். அவர்களுக்காக காங்கிரஸின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
அரவக்குறிச்சி தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்கவில்லை என்பது தவறு. குலாம்நபி ஆசாத் சென்னை வந்து கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதே, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை பிற கட்சிகள் கேட்கக் கூடாது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.
இருப்பினும் அரவக்குறிச்சியை கேட்டோம். அது திமுக வென்ற தொகுதி என்பதால் அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. இதை ஜோதிமணி புரிந்து கொண்டு கோபத்தை கைவிட வேண்டும்.
அரவக்குறிச்சி தொகுதியில் ஜோதிமணி சுயேட்சையாக போட்டியிடக் கூடாது. அப்படி அவர் சுயேட்சையாக போட்டியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஓரிருநாட்களில் சோனியா காந்தியிடம் கொடுக்கப்பட்டு வெளியிடப்படும். ஏப்ரல் 15 அல்லது 16-ந் தேதியன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் பிரசாரத்துக்காக சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வருகை தர உள்ளனர். பணப்பட்டுவாடாவைத் தடுக்க துணை ராணுவத்தை வரவழைப்போம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேவைப்பட்டால் ராணுவத்தையே வரவழைத்து பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.
இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
TNCC President EVKS Elangovan has opposed the alliance talks of TMC- BJP.
மகாத்மா காந்தியை கொன்ற, காமாராஜரை கொல்ல முயற்சித்த பாரதிய ஜனதாவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றால் அதைவிட பெரிய கொடுமை எதுவும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications