விவசாயிகள் உடல் நலமில்லாமல் மரணம்.. விவசாயிகளை இழிவாக பேசிய அமைச்சர் அலுவலகம் முற்றுகை
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தை விவசாயிகளும், அவர்களது உறவினர்களும் முற்றுகையிட்டனர். இதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி: விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், உடல் நலமில்லாமலேயே அவர்கள் உயிரிழக்கிறார்கள் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் இருந்து எழுந்துள்ளது.
போதிய அளவு தண்ணீர் இல்லாமல், காவிரியில் இருந்து நீர் கிடைக்காததாலும் தமிழகம் வறட்சி கண்டுள்ளது. இதனால் நெல், கரும்பு, சோளம், உளுந்து என அனைத்துப் பயிர்களும் கருகிவிட்டன. இதனைக் கண்ட அதிர்ச்சியில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர். பலர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர். இந்த இறப்பு எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டது.

இந்நிலையில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று பேசியுள்ளார். இது விவசாயிகளை இழிவு படுத்தும் பேச்சு என்று தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், திருச்சியில் உள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். விவசாயிகளையும், அவர்களது மரணத்தையும் அவமதித்த அமைச்சருக்கு விவசாயிகளும் அவர்களுது உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications