அமைச்சர் வரவில்லை, எம்.எல்.ஏ ஏன் என்று கேட்கவில்லை.. கடலில் விழுந்த மீனவர் குடும்பங்கள் கண்ணீர்
தூத்துக்குடி: லட்சத்தீவு அருகே தோணி நடுக்கடலில் கவிழ்ந்த விபத்தில் மாயமானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்களது குடும்பத்தினர் கலெக்டரிடம் முறையிட்டனர்.
தூத்துக்குடி இனிகோநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(தோணி தண்டல்), பாத்திமாநகரை சேர்ந்த மரியான் , இனிகோ நகர் பகுதியை சேர்ந்த ஒர்னலிஸ் மற்றும் சதிஷ், கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த கெனிஸ் ஆகிய 5பேர் மங்களுரை சேர்ந்த ரபீக் என்பவருக்கு சொந்தமான சரக்கு தோணியில் கடந்த 24ஆம் தேதியன்று கல், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றி கொண்டு லடசத்தீவு அருகில் உள்ள ஆந்திரோஷ் தீவிற்கு சென்றனர்.
இவர்கள் சென்ற தோணி கடந்த 25ஆம் தேதி ஆந்திரோஷ் தீவில் இருந்து 7 கடல்மைல் தொலைவில் சென்றபோது எதிர்பாராத விதமாக நடுக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் கடலில் தத்தளித்த ஒர்னலிஸ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களால் பத்திரமாக மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.
தோணி கவிழ்ந்த விபத்தில் நடுக்கடலில் மாயமான தொழிலாளர்கள் செல்வம், மரியான், கெனிஸ் ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இந்நிலையில் மாயமான தொழிலாளர்களை உடனடியாக மீட்பதற்காக நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி அவரது குடும்பத்தினர் கலெக்டரிடம் முறையிட்டனர்.
விபத்து நடந்து 4 நாட்களாகியும் தோணி கவிழ்ந்து 3தொழிலாளர்கள் மாயமானது தொடர்பாக எங்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், தொகுதியின் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் என யாரும் வந்து எதுவும் கேட்கவில்லை.
தொழிலாளர்களின் குடும்பத்தினரான நாங்கள் கண்ணீருடன் மீனவளத்துறை அதிகாரிகளிடம் கொடுத்த மனுவிற்கு கூட இன்று வரை உரிய பதில் தெரிவிக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியாளர் ரவிக்குமாரிடம் வருத்தமுடன் கண்ணீர் மல்க கூறினர்.












Click it and Unblock the Notifications