இரண்டு மகள்களை பலாத்காரம் செய்த கொடூர தந்தை– இரட்டை ஆயுள் வழங்கிய கோவை மகிளா கோர்ட்!
கோவை: இரண்டு மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவையை சேர்ந்தவர் கோவிந்தராஜ், கூலித் தொழிலாளி. இவர் கணவரை பிரிந்த பெண் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார். ஏற்கனவே பெண் குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணுக்கு மறுமணத்துக்குப்பின் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

தன் மகள்களான அந்த இரு சிறுமியரையும் கோவிந்தராஜ் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார். 16 மற்றும் 12 வயதான நிலையில் சிறுமியர் இருவரும் தாயாரிடம் கூறி அழுதனர்.
கணவரின் இந்த கொடூரச் செயலை மனைவி போலீசில் புகார் செய்தார். இப்புகாரினை விசாரித்த மகளிர் போலீசார் கடந்த 2013 ஆம் ஆண்டு கோவிந்தராஜை கைது செய்தனர். இரண்டாண்டுகளாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அபராதத்தை 16 வயது சிறுமிக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்ட நீதிபதி, 12 வயது சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications