அமாவாசை... போலி புனிதர்... ஓபிஎஸ்க்கு "ஃபெரா" தினகரன் கொடுத்த பரபர பட்டங்கள்
ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலவித பட்டங்களை கொடுத்து வெறுப்பேற்றி வருகிறார் டிடிவி தினகரன். ஜீரோ பன்னீர் செல்வம் என்றும் அமாவாசை, போலி புனிதர் என்றும் பலவித பட்டங்களை கொடுத்துள்ளார் ஃபெரா தினகரன்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்த ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு கூடிய கூட்டம் சசிகலா அணியினரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் உள்ள சசிகலாவிற்கு இந்த தகவல் செல்லவே அவரது அர்ச்சனை டிடிவி தினகரனை நோக்கி திரும்பியுள்ளது.
உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு இப்போது அடித்துக்கொள்வது ஏன் கேட்டு டோஸ் விட்டதாகவும் இதன்காரணமாகவே கடந்த சில தினங்களாக தினகரனின் கோபப் பேச்சு ஓ.பன்னீர் செல்வத்தை நோக்கி திரும்பியுள்ளது.
தி.மு.க.வுடன் ஓ.பன்னீர் செல்வம் மறைமுக ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டியதோடு துரோக கோடாரி, போலி புனிதர், அமாவாசை, ஜீரோ, கில்லட்டின் என பலவித பட்டங்களை அளித்து அறிக்கையால் அர்ச்சனை செய்து வருகிறார்.

அவதூறு பிரச்சாரம்
மூன்று முறை முதலமைச்சர் இருக்கையில் தன்னை அமர வைத்த இயக்கம் நான்காம் முறையிலான வாய்ப்பை தனக்கே தரவில்லை என்பதற்காகவே தன்னை வாழவைத்த இயக்கத்தையே அழிப்பதற்கு கழகத்தின் எதிரிகளோடு கூடிச் சேர்ந்து, திரை மறைவில் துரோகச் சதியில் ஈடுபட்ட பன்னீர்செல்வத்தின் மொத்த முகமூடியும் முழுவதுமாக கிழிந்து தொங்குகிற நிலையில், அம்மாவின் மரணத்தில் மர்மம் என்கிற அவதூறு பிரச்சாரத்தை முன்வைத்து பிழைக்கப் பார்க்கிறார்.

அமாவாசை
பன்னீர்செல்வம் தமது பதவி பேராசைக்காக மருத்துவத் தொழிலையே களங்கப்படுத்தியும், உயிர் காக்கும் மருத்துவர்களை ஏதோ கூலிப் படையினர் போல சித்தரித்தும் வருகிறார். மேலும், டாக்டர் எம்.ஜி.ஆருடைய மரணத்தின் போது அதிமுகவை பிளக்க துரோகக் கோடாரிகளாக செயல்பட்டவர்களையும், அம்மாவிடம் பதவி சுகங்களை இரந்து பெற்றுவிட்டு, அவருக்கே துரோகம் இழைத்தவர்களையும், அதிமுக என்னும் கழனியில் விஷக் கிருமிகளாக முளைத்த வில்லன்களையும் ஒன்று சேர்த்துக்கொண்டு திருவாளர் ‘அமாவாசை' பன்னீர், அம்மா கட்டிக் காத்த இயக்கமாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்கப் பார்க்கிறார் என்றால், அவரை வங்கத்துக் கடலோரம் உறங்குகிற வாழும் தெய்வமாம் அம்மாவின் ஆன்மா ஒருநாளும் மன்னிக்காது.

திரைமறைவு வேலை
அம்மா அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களிலேயே முதலமைச்சரின் பொறுப்புகள் அனைத்தும் பன்னீரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அம்மாவின் ஆரோக்கியம் மீட்பதற்காக இந்த அமாவாசை பன்னீர் எத்தனை முறை அமைச்சரவையைக் கூட்டி விவாதித்தார்? அயல் நாட்டிற்கு அம்மாவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று எத்தனை முறை அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் ஆலோசனை நடத்தினார்?.

போலி புனிதர்
அம்மாவின் அதிகாரங்களை தம்வசத்தில் நிரந்தரப்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளையும், வழிபாடு, பூஜைகளையும் திரைமறைவில் நடத்திக்கொண்டு, அப்போதே தி.மு.கவுடன் மறைமுக ஒப்பந்தத்திலும் துரோகப் பன்னீர் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பதெல்லாம் இப்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது. தி.மு.கவின் பொம்மலாட்ட நூலில் ஆடுகிற போலிப் புனிதர்தான் பன்னீர்செல்வம் என்பதெல்லாம் இன்று அப்பட்டமாகிவிட்டது. தான் ஒரு தி.மு.கவின் ‘பி' டீம் என்பதையும் மகா நடிகர் பன்னீர் தமது செயல்பாடுகள் மூலம் தமிழக மக்களுக்கு அம்பலப்படுத்திவிட்டார்.

சசிகலாவினால் வெற்றி
1977, 1980, 1984 என மூன்று முறை எம்.ஜி.ஆரால் அண்ணா தி.மு.க. அரியணை ஏறியதென்றால், 1991, 2001, 2011, 2016 என நான்கு முறை தி.மு.கவை வீழ்த்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரமாய் ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு அம்மாவுக்கு உடன் நின்று உழைத்ததும், கூட்டணி மேகங்களைத் திரட்டுவதும், வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதும், தயாரிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலை வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் பட்டியலாய் மாற்றுவதற்கு ஓய்வின்றி உழைத்ததும் என, 33 வருடங்கள் ஆளுமை மிக்க அம்மாவுக்கு அப்பழுக்கில்லாத தோழமையாக உழைத்தவர் சின்னம்மா என்பதையெல்லாம் கழகத்தின் மனச்சாட்சியுள்ள தொண்டன் மறுக்க மாட்டான்.

பன்னீர் துரோகம்
தியாகங்களுக்குச் சொந்தக்காரரான சசிகலாவை அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று எழுதிக் கொடுத்தார்" என்ற ஒரே பல்லவியை திரும்பத் திரும்பப் பாடுகிற பன்னீர்செல்வம், தி.மு.கவோடும், துரோகிகளோடும் கூட்டு சேர்ந்துகொண்டு கும்மாளம் அடிக்கிறார் என்பதைக் கண்டு கொதித்தெழுந்த நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் தானே சசிகலாவை பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் தலைமையேற்க வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்தார்கள்? அதைத் தொடர்ந்து தானே அதிமுகவை பன்னீரின் துரோகத்திடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவை சசிகலா எடுத்தார் என்பதையும் மக்கள் அறிவார்களே!

துரோகக் கோடாரி
ஜெயலலிதா மரணமடைந்த டிசம்பர் 5ஆம் தேதியன்று யாரால் முதலமைச்சர் ஆனார், யாரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பதவியேற்றார் என்பதையும், அதைத் தொடர்ந்து தினமும் போயஸ் இல்லத்திற்கு வந்து சின்னம்மாக்கு, அவர் எதற்காக நன்றி செலுத்துவதாக நடித்தார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டியது பன்னீர்தான்.
மேலும், சின்னம்மாவை தேர்வு செய்யும் பொதுக்குழு தீர்மானத்தை முன்னின்று முன்மொழிந்ததிலும், கழகத்தின் சட்டமன்றக் குழுத் தலைவராக சின்னம்மாவை தேர்வு செய்ததிலும் முன்னிற்பவர் போல நடித்துவிட்டு, திரைக்குப் பின்னே கழகத்தைப் பிளக்க துரோகக் கோடாரியைக் கூர் தீட்டியது பன்னீரல்லவா!

பதவிப்பித்தர்
போலி மருத்துவர் ராமசீதா என்பவரை ஏவிவிட்டு, அம்மா இறந்த பிறகே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்று அவதூறு விதைத்தது...
புரளி விதைத்து குரளி வித்தை செய்வதில் நரியையே விஞ்சுகிற நயவஞ்சகப் பேர்வழியான பி.எச். பாண்டியன் போன்றோரைத் தூண்டிவிட்டு, அம்மா கீழே தள்ளிவிடப்பட்டார்... அம்மாவின் உடம்பிலே காயம்... இந்தியா டுடே தொலைக்காட்சி நாளைக்கு இது குறித்து ஆவணங்களோடு அம்பல படுத்தப் போகிறது..." என்றெல்லாம் நித்தம் ஒரு பித்தலாட்டத்தை அவிழ்த்து விட்டு, அம்மாவின் பொன்னேட்டுச் சரித்திரத்தை அவதூறுகளால் களங்கப்படுத்த அலைவதும் பதவிப் பித்தர் பன்னீரல்லவா!

பச்சைப்பொய்யர்
மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை, அப்பலோ மருத்துவமனை அறிக்கை, லண்டன் மருத்துவரின் அறிக்கை, இவற்றோடு உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்ட மருத்துவ அறிக்கைகள் யாவும் புரட்சித் தலைவி அம்மாவின் இயற்கை மரணத்தில் எந்தவித ஐயப்பாடுகளும் இல்லை என்பதையும், அவருக்கு உலகத்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதையும் உறுதி செய்துவிட்ட நிலையில், தமது அரசியல் வாழ்க்கை அஸ்தமனத்தை நோக்கி விரைகிறது என்னும் அச்சத்தில் பச்சைப் பொய்யர் பன்னீர் மர்மம், மர்மம் என்ற ஒற்றைப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, அதனை உண்மையாக்கிவிடலாம் என்ற கோயபல்ஸ் தத்துவத்தை கொள்கையாக்கிக்கொண்டு அலைகிறார்.

கில்லட்டின் கதி
ஆனால், தலையை துண்டிப்பதற்கான எந்திரத்தைக் கண்டுபிடித்த கில்லட்டினே பின்னாளில் பிரெஞ்சு புரட்சியின்போது அவர் கண்டுபிடித்த அந்த கில்லட்டின் எந்திரத்தாலே தலை துண்டிக்கப்பட்டு மாண்டார் என்பதே வரலாறு. அது போலவே இன்று, அவதூறுகளையும், அடுக்காத பழிகளையும் பிறர் மீது போட்டு, அதில் தனக்கான அரசியல் வாய்ப்பை உருவாக்க நினைக்கும் பச்சைப் பொய்யர் பன்னீருக்கும் அந்த கில்லட்டின் கதிதான் காத்திருக்கிறது. அவர் இழைக்கும் துரோகத்திலும், அடுத்தவர் மீது அவர் தொடுக்கும் அடுக்காத பாவத்திலும் அவரே வீழ்ந்து போவார் என்பது மட்டும் நிச்சயம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications