அதிமுக பொதுக்குழுவிற்கு 350 பேனர்கள்.. ஒரே நாளில் அனுமதித்தது எப்படி? அரசிடம் கேட்ட ஹைகோர்ட்
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்காக 350 பேனர்கள் வைத்த ஒரே நாளில் அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ஒரேநாளில் அனுமதி அளித்த வேகமாக அதிகாரிகள் இருக்கிறார்களா? அப்படி எனில் 2015ம் ஆண்டில் மட்டும், விண்ணப்பித்து எத்தனை நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
சென்னை, திருவான்மியூர், ராமச்சந்திரா மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், 2015, டிச., 31ம் தேதி, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. கல்வி வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து, 'டிராபிக்' ராமசாமி, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர போர்டுகள், டிஜிட்டல் பேனர்களின் அளவு, அனுமதி பெறப்பட்டது போன்ற விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நீதிபதி புஷ்பா சத்தியநாராயண அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை நகரில் 350 பேனர்கள் வைக்க அனுமதி அளித்ததாக சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், டிஜிட்டல் பேனர்கள், பதாகைகள் வைப்பதற்கு, மாவட்ட ஆட்சியரிடம், எம்.எல்.ஏ.,க்கள் செந்தமிழன், அசோக், எம்.பி., விஜயகுமார், வருவாய் துறை அமைச்சரின் உதவியாளர் ஆகியோர், 29 மற்றும் 30ம் தேதிகளில் விண்ணப்பித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டலங்களின் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம், தடையில்லா சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். டிஜிட்டல் பேனர்கள், 15x10 அடி அளவில் வைக்க அனுமதி வழங்கும்படி பரிந்துரை செய்துள்ளனர். அதன் படி, டிஜிட்டல் பேனர்களை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், 350 பேனர்கள் வைப்பதற்கு, அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான கட்டணமாக, 97 ஆயிரத்து, 500 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி கேள்வி
அதை அரசு வழக்கறிஞர் வாசிக்கும் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஒரே நாளில் விண்ணப்பித்து பணம் கட்டியவர்களுக்கு அனுமதி அளித்துள்ளீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு வழக்கிறஞர் ஆம் என பதில் அளித்தார். உடனே நீதிபதி, அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இவ்வாறு கொடுக்கிறீர்களா அல்லது பொதுமக்களுக்கும் இவ்வாறு தரப்படுகிறதா என கேட்டார்.

என்னா ஒரு வேகம்
ஒரே நாளில் இவ்வாறு பேனர்களை வைக்க அனுமதி அளித்த அதிகாரிகளின் வேகம் வியக்க வைப்பதாக கூறிய தலைமை நீதிபதி கவுல் இது போன்று திறமையாக செயல்படும் அதிகாரிகளின் வேகம் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

நீதிபதி உத்தரவு
அரசு தாக்கல் செய்த மனுவில் இருந்து, ஐந்து பேருக்கு, 350 பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது தெரிகிறது. ஒரு டிஜிட்டல் பேனருக்கு, 250 ரூபாய் வீதம், பணம் செலுத்தப்பட்டுள்ளது.சிலவற்றை தவிர, பெரும்பாலான பேனர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்களுக்கு, விண்ணப்பித்த நாளில், பணம் செலுத்திய நாளில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் பேனர்கள் விபரம்
2015ம் ஆண்டில், எத்தனை எண்ணிக்கையில் அனுமதி வழங்கப்பட்டது.விண்ணப்பித்த தேதிக்கும், அனுமதி வழங்கப்பட்ட தேதிக்கும் இடையேயான நாட்கள் எத்தனை என்ற விவரங்களை அறிய விரும்புகிறோம். ஒரே நாளில் விண்ணப்பித்து பணம் கட்டி அனுமதி பெற்றவர்களின் விரிவான பட்டியல் ஆகியவற்றை அடுத்த மாதம் 15ம் தேதி தாக்கல் செய்ய சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வேகமாக சுழலும் அரசு இயந்திரம்
ஆள்பவர்களுக்கு மட்டுமே அரசு இயந்திரம் சுழல்வது வாடிக்கையான நிகழ்வுதான். இந்த பேனர் விவகாரம்தான் இப்போது சென்னை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது அதனால்தான் பேனர் வைத்த செந்தமிழனின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. பேனரை வைக்கும் முன்பே தடுத்திருந்தால் இதுபோன்ற சிக்கல்களை சந்திக்காமல் தவிர்த்திருக்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications