நடிகர் விஜய் கட்சியின் கொடிக்கம்பங்கள் அகற்றம்.. நிர்வாகிகள் 20 பேர் மீது அதிரடி வழக்கு..பரபரப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் உள்பட 20 பேர் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் திரைப்படத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்துள்ளார். கடந்த 2ம் தேதி நடிகர் விஜய் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். ‛தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டார்.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை எனவும், வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் காண்பதாகவும் தெரிவித்தார். இவரது இந்த அறிவிப்பு என்பது அதிக கவனம் பெற்றது.
இதற்கிடையே தான் நடிகர் விஜய்யின் ‛தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் வெற்றி என்ற சொல்லின் இறுதியில் ‛க்' என்ற ஒற்றெழுத்து இல்லை. இது இலக்கண பிழை என கூறப்பட்டது. இதையடுத்து அவரது கட்சியின் பெயரில் ‛க்' சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி கட்சியின் பெயர் என்பது ‛தமிழக வெற்றிக் கழகம்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் கட்சி பணிகளை தீவிரப்படுத்த நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். இதற்கிடையே தான் தமிழக வெற்றிக் கழக தலைவர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த வேளையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சார்பில் கொடிக்கம்பங்கள் புதிதாக வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக கொடிக்கம்பங்கள் வைக்க காவல்துறை உள்ளிட்டோரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் வைத்து நேற்று கொடியேற்றியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்துறை, வருவாய்த்துறையினர் சென்று கொடிக்கம்பங்களை அகற்றி உள்ளனர். மேலும் அனுமதியின்றி கொடிக்கம்பம் வைத்ததாக கொடியேற்றியதாக கூறி மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி உள்பட 20 பேர் மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications