மழைநீருடன் கலந்த கழிவுநீர்... சென்னை வளசரவாக்கத்தில் துர்நாற்றம், நோய் பரவும் அபாயம்
சென்னை: சென்னையில் பெய்த கனமழையால் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல தேங்கியுள்ள நிலையில் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வளசரவாக்கம் ராதாநகர் பகுதியில் ஏற்கனவே மழைநீருடன் கழிவு நீர் கலந்து தேங்கிய வெள்ளம் அகற்றப்படாமல் இருக்க மீண்டும் பெய்துள்ள மழையால், வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் எழுந்துள்ளது என்று புகார் தெரிவித்துள்ளனர் அப்பகுதிவாசிகள்.

மழை வெள்ளம்
கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் மழை கொட்டியது. கடலூர் மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டது. இதனால் பல பகுதிகளில் வெள்ளக்காடக மாறின. கடந்த வாரத்தில் புதன்கிழமை முதல் சனிக்கிழமைவரை மழை இல்லை. நன்றாக வெயில் அடித்தாலும் பல இடங்களில் தேங்கிய வெள்ள நீர் வடிய வில்லை. இதற்கு காரணம் போதிய கால்வாய்கள் வசதிகள் இல்லை என்பதுதான்.

கழிவுநீர் கலந்த மழைநீர்
சாலைகளை தோண்டி, தற்காலிக வடிகால்வாய்கள் அமைத்தாலும், மழை வெள்ளம் புகுந்துள்ள பல இடங்களுக்குள் உள்ளேயே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தேங்கிய தண்ணீருடன் கழிவு நீர் கலந்திருப்பதால், அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. வீட்டிற்குள்ளேயும், வெளியிலும் தண்ணீர் இடுப்பளவு நிற்பதால், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த மக்களை தூர்நாற்றமும், சுகாதார சீர்கேடுகளும் படாதபாடுபடுத்தி வருகிறது.

தொற்றுநோய் ஆபத்து
ஆர்.ஏ.புரம், மந்தைவெளிபாக்கம், கேவிபி கார்டன், சண்முகபுரம், அரும்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் ரோடு, புதிய நடராஜபுரம், வளசரவாக்கம் லட்சுமிநகர், வேளச்சேரி ராம்நகர், விஜயநகர், அம்பத்தூர், நொளம்பூர், வில்லிவாக்கம் சிட்கோநகர், நெசப்பாக்கம், கோயம்பேடு, முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கழிவு நீர் கலந்திருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். இங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வடிய வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதோடு நடமாடும் மருத்துவக்குழுவும் செயல்படுகிறது. மழைக்கால நோய்கள் பரவாமலிருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொசுக்களை கட்டுப்படுத்த மருந்தும் தெளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

வளசரவாக்கம் வெள்ள நீர்
வளசரவாக்கத்தின் ஸ்ரீ தேவி குப்பம், ஏ.கே.ஆர். நகர் 3ஆவது தெருவிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை நீர் வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவும், அலுவலகங்களுக்குச் செல்லவும் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அதிலும் குடும்பப் பெண்கள் காய்கறி வாங்கவும், அன்றாட தேவைகளுக்காக கடைக்குச் செல்லவும் முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ராதாநகரில் அவலம்
வளசரவாக்கத்தில் பெரும்பாலான இடங்களில் வெளியேற்றப்படும் மழை நீரானது அந்தப்பகுதியில் 10 நாள்களுக்கும் மேலாக தேங்கி நிற்பதால், ஒரு சிலருக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் நமது தட்ஸ் தமிழுக்கு புகார் அனுப்பியுள்ளார்.

மாநகராட்சி அலட்சியம்
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை நீர் தேங்கி நின்றதால் ஏராளமானோருக்கு வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அதன்பிறகும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வளசரவாக்கம் ராதாநகர் பகுதிவாசிகளின் குற்றச்சாட்டாகும். ஏற்கனவே தேங்கியுள்ள வெள்ளநீர் வடியாத நிலையில் மீண்டும் மழை கொட்டத்தொடங்கியுள்ளதால் கவலையில் ஆழ்ந்துள்ளனர் இப்பகுதிவாசிகள்.












Click it and Unblock the Notifications