ஜல்லிக்கட்டு அவசர சட்டம்.. மத்திய அரசே பிறப்பிக்கலாமே.. மாஜி நீதிபதிகள், வக்கீல்கள் கருத்து
ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக மத்திய அரசு இரவோடு இரவாக அவசர சட்டம் பிறப்பிக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்பது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், தமிழக மக்களின் கோரிக்கை.
இதனை வலியுறுத்தியே கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர முடியாது என்று கூறி வருகின்றனர்.

இதனிடையே ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சட்டம் இயற்ற அரசியல் சட்டப்படி அதிகாரம் உள்ளது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கருத்து தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கு துன்பம் விளைவிக்காத வகையில் நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு நடத்த மாநில சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக மத்திய அரசு இரவோடு இரவாக அவசர சட்டம் பிறப்பிக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு சம்பந்தமாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்த வரலாறு உள்ளது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதே போல உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற முடியும் என மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். அவசர சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மத்திய அரசிடம் அதிகாரம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வழக்கு நிலுவையில் இருந்தாலும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கட்ஜூ கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என்பது தவறு எனவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications