பிரான்ஸுடன் இணைந்து புதுச்சேரியை புதுப்பிக்கப் போகும் நாராயணசாமி!
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரான்ஸ் அரசுடன் இணைந்து பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் கல்வித் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதராக நியமிக்கப்பட்டுள்ள அலெக்சாண்ட்ரே ஜீல்கர், இன்று புதுச்சேரியில் நாராயணசாமியை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை நாராயணசாமி சந்தித்தார்.

அப்போது நாராயணசாமி கூறியதாவது:
பிரெஞ்சு அரசுடன் இணைந்து பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்கள், கல்வித் திட்டங்களை செயல்படுத்த புதுச்சேரி அரசு தயாராக உள்ளது. இதுகுறித்து பிரெஞ்சு தூதரிடம் விவாதித்தோம்.
பிரெஞ்சு அரசும், புதுவையின் வளர்ச்சியில் தீவிரப் பங்காற்ற ஆர்வமாக இருப்பதாக ஜீல்கர் தெரிவித்தார். வளர்ச்சித் திட்டங்களில் முக்கியமாக பெருமளவில் உதவி செய்ய பிரான்ஸ் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியை பள்ளிக் குழந்தைகள் மூலமாக பிரபலப்படுத்தவும் பிரெஞ்சு அரசு ஆர்வமாக உள்ளது. இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது.
புதுவையில் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த பிரெஞ்சு வளர்ச்சி நிறுவனம் ரூ. 21,000 கோடியை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த தொகையானது மத்திய அரசிடம் கடனாக வழங்கப்படும். மத்திய அரசு இதை மானியமாக புதுச்சேரி அரசுக்கு வழங்கும்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுவையையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியுள்ளோம். புதுச்சேரி மற்றும் காரைக்காலை இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications