மயிலாடுதுறை டிரைவர் இறந்த வழக்கில் திருப்பம்.. சிக்க வைத்த கள்ளகாதலியின் செல்போன் உரையாடல்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மது குடித்து டிரைவர் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலிக்கு தொல்லை கொடுத்ததால் நண்பர் தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது. செல்போன் உரையாடலால் நண்பனை சுனா பானா ஸ்டைலில் காலி செய்தவர் கைதாகி உள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த 32 வயதாகும் ஜோதிபாசுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார். ஜோதிபாசுவின் மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் ஃபேக்டரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஜோதிபாசு டிரைவர் ஆவார். இவரது நண்பர் ஜெரால்டு(24)ம் டிரைவர் ஆவார்.

Mayiladuthurai tasmac liquor

ஜோதிபாசு கடந்த 9ம் தேதி மதியம் காரைக்கால் மாவட்ட எல்லையில் உள்ள நல்லாத்தூரில் உள்ள மதுபான கடையில் மதுபானம் வாங்கி உள்ளார். ஒரு பாட்டிலை குடித்துவிட்டு, இன்னொரு பாட்டில் வாங்கி அதில் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக பூச்சி மருந்து கலந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

வீட்டின் அருகே தென்னம்பிள்ளை சாலை பகுதியில் பூச்சி மருந்து கலந்த மது குடித்துவிட்டு, பூச்சி மருந்து கலந்த பாதி மதுபானத்தை அங்கேயே வைத்திருக்கிறார். அப்போது அப்பகுதிக்கு வந்த அவரது நண்பரான ஜெரால்டு(24) என்பவர் பூச்சி மருந்து கலந்து இருப்பதை அறியாமல் ஜோதிபாசு வைத்திருந்த மதுபானத்தை வாங்கி குடித்துவிட்டார். இருவரும் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) கலந்து குடித்து விட்டதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவே ஜெரால்டு பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்து பெரம்பூர் போலீசார் ஜோதிபாசுவிடம் விசாரித்தனர். அப்போது தனது மனைவி தன்னுடன் சண்டை போட்டு விட்டு பிரிந்து சென்று விட்டதாகவும், இதனால் விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அப்போது அங்கு வந்த ஜெரால்டு, தான் குடித்துக்கொண்டிருந்த விஷம் கலந்த மதுபானத்தை குடித்து விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஜோதிபாசு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக பெரம்பூர் போலீசார், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விஷம் கலந்த மது அருந்திய நண்பர்கள் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்பட்டதால் நண்பர்கள் இருவருக்கும் இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதா? ஜெரால்டு உயிரிழப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே ஜூலை 10ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெரால்டு உடலை உறவினர்கள் பெற்றுச்சென்று இறுதி சடங்கு செய்ய சென்றார்கள். இந்நிலையில் ஜெரால்டு உடலை அடக்கம் செய்யாமல் செம்பனார்கோவில் அருகே கடலி சாலையில் 11-ந் தேதி மதியம் கொண்டு வந்து வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவருடன் ஜெரால்டு, ஜோதிபாசு ஆகிய இருவருக்குமிடையே பழக்கம் இருந்தது தொடர்பாக முன்விரோதம் இருந்ததால் ஜோதிபாசு திட்டமிட்டு மதுவில் விஷத்தை கலந்து ஜெரால்டுக்கு கொடுத்து கொலை செய்ததாக ஜெரால்டுவின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். எனவே இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜோதிபாசுவை கைது செய்ய வேண்டும் என்று கூறி பல மணி நேரம் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே மருத்துவமனையில் இருந்த ஜோதிபாசுவிடம் விசாரணை நடத்த திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை முடிந்து சென்று விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து ஜோதிபாசுவை பிடித்து பெரம்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரித்தனர். அந்த விசாரணையில் திருப்பமான தகவல்கள் வெளியாகியது.

மனைவியை பிரிந்த ஜோதிபாசு திருமணம் செய்து கொள்ளாமல் கைக்குழந்தையுடன் உள்ள ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தாராம். அந்த பெண்ணுக்கு ஜோதிபாசு மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனால் தான் ஜோதிபாசுவுடன் குடும்பம் நடத்திய பெண் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கோவைக்கு போய்விட்டாராம். அதன்பின்னர் ஜோதிபாசு கள்ளக்காதலியுடன் ஜாலியாக இருந்து வந்தாராம்.

ஒரு நாள் தனது செல்போனில் சார்ஜ் இல்லாததால் ஜெரால்டு போனை வாங்கி தனது கள்ளக்காதலியுடன் ஜோதிபாசு பேசியிருக்கிறார். அதன்பின்னர் ஜோதிபாசு பேசிய அவரது கள்ளக்காதலியின் நம்பருக்கு ஜெரால்டு அடிக்கடி போன் செய்து பேசி தான் அந்த பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறினாராம்.

இந்த விவரத்தை ஜோதிபாசுவிடம் அவரது கள்ளக்காதலி தெரிவித்துள்ளார். இதனையறிந்து ஆத்திரம் அடைந்த ஜோதிபாசு ஜெரால்டை கொல்ல முடிவு செய்தார். தனது திட்டத்தை அரங்கேற்ற சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு இருந்த ஜோதிபாசு சம்பவத்தன்று நல்லாத்தூர் பகுதிக்கு சென்று மது பாட்டில் வாங்கி உள்ளார். தொடர்ந்து நல்லாடை கிராமத்தில் உள்ள மருந்து கடையில் தென்னைக்கு வைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கிக்கொண்டு வந்தாராம்.

தென்னமர சாலையில் அமர்ந்து மதுவில் பூச்சிமருந்தை கலந்து தயாராக வைத்து உள்ளார். அப்போது ஏற்கனவே மதுபோதையில் வந்த ஜெரால்டுவிற்கு விஷம் கலந்த மதுவை கொடுத்துள்ளார். நண்பர் கொடுத்த மதுவை வாங்கி ஜெரால்டு குடித்திருக்கிறார். உடனே தனது கள்ளக்காதலிக்கு போன் செய்த ஜோதிபாசு, விஷம் கலந்த மதுவை ஜெரால்டு குடித்துவிட்டதாகவும் இனி நமக்கு தொல்லை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜோதிபாசு மற்றும் அவரது கள்ளக்காதலியின் செல்போன்களை கைப்பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டனர். அதன்பின்னர் தான் ஜெரால்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. ஜெரால்டு கொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜோதிபாசுவை கைது செய்து தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+