பூரண மதுவிலக்கு கோரி சென்னையில் 26-ம் தேதி உண்ணாவிரதம்... ஜி.கே.வாசன் அறிவிப்பு
சென்னை : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தவும் வலியுறுத்தி வரும் 26-ம் தேதி சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது...

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமையை மீட்டுத் தரவேண்டும்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகளை வழங்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த இலங்கை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி த.மா.கா தொடர்ந்து போராடி வருகிறது.
இந்தக் கோரிக்கைகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் 26-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே எனது தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். தமாகா நிர்வாகிகள், தொண்டர்களோடு பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு வாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications