அடுத்த வாரம் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா! நோட்டமிட்டு புகுந்த கும்பல்.. கள்ளக்குறிச்சியில் 200 பவுன் நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உலுக்கும் அளவுக்கு அதிகாலையில் துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற நகை கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்களை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற துணிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதிகாலையிலேயே இரும்பு ராடுடன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த வயதான தம்பதியை கத்தி முனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்று இறுக்கிறார்கள். மஞ்சள் நீராட்டு விழாவுக்காக வீட்டில் வங்கியில் இருந்த நகைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வீட்டுக்கு கொண்டு வந்து பீரோவில் வைத்துள்ளனர். அதற்குள் இந்த நகை கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிகாலையிலேயே இரும்பு ராடுடன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்த விவரம் வருமாறு: -
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கேசரி வர்மன். இவர் வெளிநாட்டில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டிற்குள் இன்று அதிகாலை பின்பக்கமாக இரும்பு ராடுடன் புகுந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்தவர்களை கட்டிப்போட்டுவிட்டு வீட்டின் பீரோவில் இருந்த 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கேசரி வர்மன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் பாஸ்போர்ட் ரெனிவல் செய்ய சென்னை சென்ற நிலையில், வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பெற்றோர், மற்றும் குழந்தைகளை கட்டிப்போட்டு இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். வரும் 7 ஆம் தேதி தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா வைப்பதற்காக கேசரிவர்மன் தங்க நகைகளை வைத்து இருந்துள்ளார்.

சத்தம் வந்தால் கொலை செய்து விடுவோம்
அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த கேசரிவர்மனின் தாய் மற்றும் தந்தையை பிடித்து வைத்து மிரட்டியுள்ளனர். அப்போது அவர்கள் இருவரையும் சத்தம் போடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார்கள். பின்னர் இருவரையும் தனியாக ஒரு அறைக்கு கத்தி முனையில் அழைத்து வந்தனர்.
அப்போது கத்த முயன்ற முதியவரை தலையனையால் அமுக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் இருவரையும் தாக்கி இனி சத்தம் எதுவும் வரக்கூடாது வந்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி பீரோ சாவியை வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரையும் அந்த அறையில் வைத்துக்கொண்டே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து நடந்த சம்பவம் பற்றி பெற்றோர் இருவரும் மகனிடம் தெரிவித்து இருக்கிறார்கள். அதன்பேரில் அவர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் கைரேகை நிபுணர்களுடன் வீட்டில் வந்து விசாரணை நடத்தினர். கைரேக நிபுணர்களும் தடயங்களை சேகரித்து சென்றனர். வீட்டில் நகை இருந்தது தெரிந்தே கொள்ளையடிக்க வந்து இருப்பதால், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதிகாலையில் வீட்டில் வயதான தம்பதி இருப்பதை தெரிந்துகொண்டே, இரும்பு ராடு, கத்தியுடன் வந்து கொள்ளை சம்பவத்த அரங்கேற்றிய சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications