Why should boys have all the fun?...பதற வைக்கும் நெல்லை மாணவிகள்!
நெல்லை: நெல்லையில் போதிய அளவில் பஸ்கள் இல்லாததாலும், இருக்கிற பஸ்களிலும் கூட்டம் கட்டி ஏறுவதாலும் மாணவர்களுக்குப் போட்டியாக மாணவிகளும் புட்போர்ட் பயணம் மேற்கொள்வதால் பெற்றோர்களும், பொதுமக்களும் பதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலசமுத்திரத்திற்கு காலை, மதியம், மாலை என மூன்று முறை பஸ்கள் இயக்கப்படுகின்றன. சங்கரன்கோவிலில் இருந்து சீவலசமுகத்திற்கு இடையே 10க்கும் மேற்பட்டகிராமங்கள் உள்ளன.

இங்குள்ள மக்கள், விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலரும் தங்களின் அத்திவாசிய தேவைக்கு அங்கு இப்படி இயக்கப்படும் ஒரு பஸ்சை மட்டுமே நம்பி உள்ளனர். சில சமயம் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தால் பள்ளி மாணவர்களும், அவர்களுக்கு இணையாக பள்ளி சிறுமிகளும் கூட பஸ்சின் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் தொங்கி கொண்டு செல்கின்றனர்.
இந்த காரணத்தால் பள்ளி குழந்தைகள் அருகில் 4 கிமீ தூரம் நடந்து சென்று அமுதாபுரம், ஊத்துமலையில் இருந்து வரும் பஸ்சில் ஏறி தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர். இப்படி 4 கிமீ தூரம் நடந்து செல்வதால் அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. போதிய பஸ் வசதி இல்லாததால் அவர்கள் பள்ளி முடிந்து 4 கிமீ தூரம் நடந்து வந்து வேறு ஊரில் பஸ் பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்த காரணத்தால் பள்ளி மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு காலை பள்ளி செல்லும் சமயத்திலும், மாலை பள்ளி விடும் சமயத்திலும் போதிய பஸ் வசதி செய்ய வேண்டும் என்று சமூக நல இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
மாலை வேலைகளில் பள்ளி சிறுமிகளும், மாணவிகளும் பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்வதை பார்க்கும் பொதுமக்கள் அங்கு திகிலடித்து போய் கிடக்கின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் அந்த ஊருக்கு அருகே கோபாலசமுத்திரத்தில் பஸ் நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications