தமிழ் மண்ணில் 'மோடி மஸ்தான்' வேலை எடுபடாது: காங்கிரஸ்
சென்னை: காமராஜர் பிறந்த மண்ணில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு கை சின்னம் பொறித்த கடிகாரங்களை காங்கிரஸ் கட்சியினர் வழங்குவதாக குற்றம்சாட்டியுள்ள மோடி மீது வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
''தான் பிரதமர் வேட்பாளர் என்பதை மறந்துவிட்டு நாலாந்தர பேச்சாளர் போல மோடி பேசி வருகிறார்.

மீனவர்கள் பிரச்சினை
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை குறித்து எதுவும் இல்லை. ஆனால், ராமநாதபுரத்தில் நின்று கொண்டு மீனவர்களின் நலனைக் காப்பேன் என்கிறார். ராகுல் காந்தியையும் இழிவுப்படுத்தி பேசி வருகிறார்.

பொய் குற்றச்சாட்டு
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பொருளாதார சிக்கலில் தவிக்கும்போது, காங்கிரஸ் கட்சியினர் வீடுதோறும் கை சின்னம் பொறிக்கப்பட்ட கடிகாரங்களை விநியோகிப்பதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்கு தொடருவோம்
இதற்கான ஆதாரங்களை அவர் அளிக்க வேண்டும். இல்லை என்றால், பிரசாரத்தின்போது உண்மைக்கு மாறாகப் பேசி வருகிறார் என அவர் மீது வழக்கு தொடருவோம்.

காமராஜர் பிறந்த மண்
வாக்களிக்க பணம் தருவதும், இலவசப் பொருள்கள் தருவதும் காங்கிரஸ் கலாசாரம் அல்ல. பணத்தை தண்ணீராக செலவு செய்வது காங்கிரஸ் கட்சியா? பா.ஜ.க.வா? என்பதை மக்கள் நன்கறிவார்கள். காமராஜர் பிறந்த மண்ணில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications