For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

50 நாய்கள் பலியாகியும் மவுனம்.. ஜல்லிக்கட்டை தடுக்க துள்ளி வந்த 'ஆர்வலர்கள்' எங்கே?

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக தலைநகர் சென்னை அருகே 50க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட தகவல் வெளியான பிறகும், பீட்டா அமைப்போ அல்லது அதற்கு ஆதரவு தெரிவித்து ஜல்லிக்கட்டு தடைக்காக துள்ளி ஓடி வந்த பிரபலங்களோ வாய் திறக்கவில்லை.

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை தமிழன் எதிர்பார்ப்பதைவிட ஒரு படி அதிகமாக எதிர்பார்த்து காத்திருப்பது வன விலங்கு ஆர்வலர்கள் என சொல்லிக்கொள்வோர்தான். இந்தியாவிலும் கடை (கிளை) திறந்துள்ள சர்வதேச விலங்குகள் நல அமைப்பான பீட்டாவுக்கும் இது பொருந்தும்.

தமிழில் இவர்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 'சல்லிக்கட்டு'தான். கேரளாவில் யானைகளை வைத்து அணி வகுப்பு நடக்கும்போதும், ஆந்திராவில் சேவல்களை வைத்து, அவை மரணமடையும் வரை சண்டை போட செய்யும்போதும், காளைகளை ரேக்ளா ஓட்டும்போதும் அந்த விலங்குகள் மீது வராத பாசம், ஜல்லிக்கட்டு காளைகள் மீது பீறியடிக்கும் பாருங்கள். அடடா, அப்படி ஒரு அன்பு.

காளையை தழுவிவிட்டு அப்படியே அனுப்பிவிடும் பாரம்பரிய விழாவுக்கு வண்டி கட்டி சண்டைக்கு வரும் இந்த ஆர்வலர்களில் பெரும்பாலானோர் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டனுக்காகவும், சிக்கனுக்காகவும், கசாப்பு கடைகளில் கையில் பைகளோடு கால் கடுக்க காத்திருப்போர் என்பது வேறு ஒரு தளத்தில் விவாதிக்க வேண்டிய விஷயம்.

சரி அதை விடுங்கள்.. ஒருவேளை தமிழ்நாட்டில் ஏதாவது நடந்தால் மட்டுமே இவர்களுக்கு விலங்குகள் மீது பாசம் வரும்போலும் என்று நினைத்தால் அதுவும் பொய். உதாரணத்திற்கு சென்னை அருகே 50க்கும் மேற்பட்ட நாய்களை கிராம மக்கள் சிலர் விஷம் வைத்து கொன்று, அதை தீயிட்டு எரித்துள்ளனர்.

என்டிடிவியோ தங்களுக்கு கிடைத்த தகவல்படி கொல்லப்பட்டது 80 நாய்கள் என்கிறது. கருகிப்போய் கண்டெடுக்கப்பட்டவை என்பதால் நாய்கள் எண்ணிக்கையில் முன்பின் இருக்கலாம். ஆனால் 50க்கும் மேல் நாய்கள் கொல்லப்பட்டது உறுதியான விஷயம்.

ஆனால் இதுவரை பீட்டாவோ, அல்லது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க பீட்டா மேற்கொண்ட முயற்சிக்கு தோளோடு தோள் கொடுத்து ஆதரவு திரட்டிய, விராட் கோஹ்லியோ, வித்யா பாலனோ, பிபாஷா பாசுவோ, அட நம்ம எமி ஜாக்ஷனோ கூட என்னன்னு ஒரு வார்த்தை கேட்கவில்லைங்க. மூனுஷாவும் மூச்சு விடவில்லை.

இவர்கள் வாய் மூடியிருப்பதை பார்க்கும்போது, பீட்டா குரூப்பின் பாசம் விலங்குகள் மீது இல்லை, காளைகள் மீதான காழ்ப்புணர்ச்சிதான் என்ற தமிழ் மரபு ஆதரவாளர்களும், கட்சியினரும் கூறியது உண்மையோ என்ற சந்தேகம் பாமரனுக்கும் எழும்.

நாட்டு மாடுகளை ஒழித்துக்கட்டி, வெளிநாட்டு மாடுகளை தலையில் கட்டும் முயற்சிக்கு தெரிந்து சிலரும் தெரியாமல் பலரும் துணை போகிறார்கள் என்ற வாதத்திற்கு வலு சேர்க்கிறது இந்த மவுனம்.

இனியும் பொங்கல் வரும்.. ஜல்லிக்கட்டை தடை செய்ய கொடி பிடித்து கோஷ்டிகள் வரும். அப்போது கேட்கலாம், இப்போது எங்கே சென்றீர்கள் என்பதை!

English summary
In the Keezhampur village in Kancheepuram (near Chennai) goat-keepers Mutha and Murugadoss set 50 dogs ablaze.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X