கோகுல்ராஜ் வழக்கில் பரபரப்பு: யுவராஜின் நண்பர் திடீர் மாயம் – மனைவி புகார்
சேலம்: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான யுவராஜின் நண்பர் பிரபு திடீரென மாயமான சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்ககிரியில் இருந்து சேலத்திற்கு வந்த போது பிரபு மாயமானதாகவும், பிரபு கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவரது மனைவி .போலீசில்புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. பொறியியில் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் காவல்துரையினரால் தேடப்பட்டு வரும் யுவராஜின் நண்பரான இவர், தனது மனைவி காயத்ரியுடன், நேற்று சேலம் சென்றுள்ளார்.

பின்னர், ஒரு முக்கியமான வேலையாக வெளியே செல்வதாக மனைவி காயத்ரியிடம் கூறி விட்டு சென்ற பிரபு, மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த பிரபுவின் மனைவி மற்றும் உறவினர்கள், சேலம் அழகாபுரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் கழுத்தறுபட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டார். காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படவே, இந்த வழக்கில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிலர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா கடந்த செப்டம்பர் 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டு வழக்கையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது யுவராஜின் நண்பர் திடீரென மாயமாகி இருப்பதும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. மாயமான பிரபு, யுவராஜின் மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications