காதலித்து கொலையான கோகுல்ராஜ்… சுறுசுறுப்பான சி.பி.சி.ஐ.டி: சிக்குவார்களா குற்றவாளிகள்?

Subscribe to Oneindia Tamil

சேலம்: சாதி மாறி காதலித்த குற்றத்திற்காக தலை வெட்டப்பட்டு ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்டார் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். தற்கொலை என்று கூறப்பட்டு பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்ட கோகுல்ராஜ் மரண வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி விஷ்ணு பிரியாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த இரண்டு வழக்குகளும் தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகர் பகுதியை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி திருச்செங்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வெட்டப்பட்ட நிலையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. காதல் விவகாரத்தால் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. அதை மறுத்த கோகுல்ராஜின் பெற்றோர், தமது மகன் கொலை செய்யப்பட்டதாகவும், கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர். செந்தில்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது.

கோகுல்ராஜ் கடத்தி கொலை

கோகுல்ராஜ் கடத்தி கொலை

தனிப்படையினர் நடத்திய விசாரணையை அடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட சிலருக்கு கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. கோகுல்ராஜ், கொலை செய்யப்படுவதற்கு முன், அவரை அந்த கும்பல் கண்ணைக் கட்டி காரில் அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

அதையடுத்து யுவராஜ் உள்பட ஒன்பது பேர் மீது திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதில் சதீஷ் (26), செல்வராஜ் (33), சந்திரசேகரன் (44), ரஞ்சித் (22), இளைஞர் ஒருவர் மற்றும் ஜோதிமணி (31) என ஒரு பெண் உள்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அனைவரும் திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் பரமத்தி வேலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

டி.எஸ்.பி தற்கொலை

டி.எஸ்.பி தற்கொலை

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தப்பவிட்டு, பொய் குற்றவாளிகள் மீது வழக்கு போடுமாறு உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து விஷ்ணு பிரியா வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி விசாரணை

சி.பி.சி.ஐ.டி விசாரணை

கோகுல்ராஜ் வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டதால் ஓமலூரில் உள்ள கோகுல் ராஜ் தாய் சித்ரா மற்றும் அண்ணன் கலையரசன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. உதவி ஆய்வாளர் மோகன் வந்த சந்தித்தார். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி நாமக்கல் வர உள்ளதாகவும் தாங்கள் நேரில் விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கேட்டனர்.

பெற்றோர் மறுப்பு

பெற்றோர் மறுப்பு

அதற்கு அவர்கள் நாங்கள் கோகுல்ராஜ் இறந்த நாளில் இருந்து எங்கள் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம். அப்படி மாற்றி இருந்தால் நியாயமான அதிகாரி விஷ்ணுபிரியா இறந்திருக்க மாட்டார் என்றும் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் எங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதால் நாங்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் கூறினர். தற்போது உடல் நலம் சரியில்லாத காரணத்தால் எங்களால் விசாரணைக்கு வர முடியவில்லை என்றும் மற்றொரு நாள் விசாரணைக்கு வருவதாகவும் கூறி அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகள் சிக்குவார்களா?

குற்றவாளிகள் சிக்குவார்களா?

சாதிமாறி காதலித்ததாக தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்ட பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+