அரசு கேபிள் டி.வி. எம்.டி மீது "கை" வைத்த லக்கானி... எதிர்க்கட்சிகள் புகார் எதிரொலி.. அதிரடி மாற்றம்
சென்னை: எதிர்க்கட்சிகளின் புகாரைத் தொடர்ந்து, அரசு கேபிள் டி.வி. மேலான் இயக்குநர் குமரகுருபரனை மாற்றம் செய்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களும், அரசு கேபிள் டி.வி. மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் சேனல்கள் திட்டமிட்டு தடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. அதோடு, அரசு கேபிள் டி.வி.யில், அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்களுக்கு மட்டுமே ஒளிபரப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கட்சி சார்ந்த தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமின்றி, நடுநிலையோடு செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்களும் புறக்கணிக்கப்படுவதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
மற்ற கட்சிகளும் இதே புகாரைக் கூறியதைத் தொடர்ந்து, இது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அரசு கேபிள் டி.வி. மேலான் இயக்குநர் குமரகுருபரனை மாற்றம் செய்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இது போதாது என்றும், அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவரான உடுமலை கே.ராதாகிருஷ்ணனையும் மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அவருக்குப் பதிலாக தனியாக தேர்தல் பார்வையாளர் ஒருவரை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த ராதாகிருஷ்ணன் திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், தற்போது உடுமலை சட்டசபைத் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications