மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிப்போம்.. அரசு ஊழியர் சங்க நிர்வாகியின் அதிரடி பேச்சு!
திருவண்ணாமலை: திமுக, அதிமுக என மாறி மாறி ஏமாந்தது போதும். இரு கட்சிகளின் ஆட்சிகளும் நமக்கு எதுவும் செய்யவில்லை. இந்த முறை மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பாஸ்கர் கூறியதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆறாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இதேபோல திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட செயலாளர் பாஸ்கர் பேசுகையில், திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது அதிகம் பாதிக்கப்பட்டு விட்டோம். இரண்டு அரசாங்கமும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அதனால் இந்த முறை நமது வாக்குகளை மக்கள் நலக்கூட்டணிக்கு செலுத்துவோம் என்றார்.
அந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். அவர்கள் மத்தியில் பாஸ்கரின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் யாரும் வெளிப்படையாக பாஸ்கரிடம் தங்களது எதிர்ப்பைக் காட்டவில்லை. சிலர் கைதட்டவும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications