3 கிரானைட் அதிபர்களுக்கு சகாயம் சம்மன்
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கின் சகாயம் குழு விசாரணையானது இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதனையடுத்து 3 கிரானைட் அதிபர்களுக்கு விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை நியமித்தது. அதன்படி அவர் கடந்த சில மாதங்களாக மதுரை மாவட்டத்தில் முகாமிட்டு கிரானைட் முறைகேடு குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகிறார்.

6 கட்ட விசாரணை முடிந்த நிலையில் தனது இறுதி கட்ட விசாரனையை கடந்த 16 ஆம் தேதி தொடங்கினார். அதன்படி கிரானைட் குவாரி அதிபர்களை விசாரிப்பதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பினார். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குவாரி அதிபர்களின் வக்கீல்கள் நேரில் ஆஜராகி சகாயத்திடம் தங்களது விளக்கத்தை தெரிவித்தனர்.
நேற்று பி.ஆர்.பி, சிந்து உள்பட 4 கிரானைட் நிறுவனங்களின் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி தங்களது விளக்கத்தை மனுவாக சகாயத்திடம் கொடுத்தனர். அதில் கிரானைட் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால் தங்களால் விரிவாக பதில் அளிக்க முடியாது என்று கூறி சில விளக்கத்தை மட்டுமே மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இன்று காலை கோரமண்டல் கிரானைட் நிறுவனம் சார்பில் அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் சகாயத்திடம் ஆஜராகி விளக்கத்தை அளித்தார். இதேபோல் எம்.எஸ். கிரானைட் நிறுவன மேலாளர் கோகுல் தங்களது விளக்கத்தை சகாயத்திடம் தெரிவித்தார்.
இதேபோல் நாளை கிரானைட் முறைகேடு தொடர்பாக பதில் அளிக்குமாறு முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரைதயாநிதி இயக்குநராக இருந்த ஒலிம்பஸ் கிரானைட், பி.ஆர் கிரானைட் உள்பட 3 நிறுவனங்களின் அதிபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் நாளை ஆஜராகி விளக்கத்தை அளிப்பார்களா அல்லது அவர்கள் வழக்கறிஞர்கள் மூலம் சகாயத்திடம் மனு அளிப்பார்களா என்பது நாளை தெரிய வரும்.
இந்நிலையில் இறுதி கட்ட விசாரணையை சகாயம் தீவிரப்படுத்தியுள்ளார். இந்த வாரத்துக்குள் கிரானைட் அதிபர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது. அதன்பின் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ள இறுதி கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் சகாயம் ஈடுபடுவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications