கனிம வளக் கொள்ளை: சகாயம் வேட்டை தொடங்குவது எப்போது?
சென்னை: உங்களுக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா... வேற... வேற... வேற... வேட்டைக்காரன்தாண்டா வேணும் என்று வேட்டைக்காரன் படத்தில் விஜய் வசனம் பேசுவார்.
அதுபோல தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகள், கனிமவளமுறைகேடுகளைப் பற்றி கண்டுபிடிக்க நியமிக்கப்பட்ட வேட்டைக்காரர்தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.

அதிகாரிகள் தயார், அலுவலகம் தயார் ஆனால் சகாயம்தான் வரவில்லை என்று தமிழக அரசு தயாராக ஒரு பதிலை வைத்துள்ளது. ஆனால் மதுரையில் மட்டும் வேட்டை நடத்தினால் போதாது தமிழகம் முழுவதும் தோண்டி துருவவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மதுரையில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் தாது மணல் மற்றும் கிரானைட் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், கிரானைட் தொழில், கனிம முறைகேட்டில் ஈடுபட்டோர் மத்தியில் பய உணர்வு ஏற்பட்டுள்ளது.
மதுரை, மேலூர் பகுதிகளில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் ரூ. 16,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கடந்த 2011ம் ஆண்டு மதுரை கலெக்டராக இருந்த சகாயம், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனையடுத்து மதுரை ஆட்சியர் பதவியில் இருந்து சகாயம் அதிரடியாக மாற்றப்பட்டார்.
இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். கிரானைட் ஆய்வுக்காக ஆள் இல்லாத விமானத்தையும் அவர் பயன்படுத்தினார். அன்சுல் மிஸ்ரா குழுவினர், மேலூர் பகுதியில் திடீர் சோதனைகள் நடத்தி, பி,ஆர்,பி, நிறுவனம், ஒலிம்பஸ் நிறுவனம், சிந்து கிரானைட் நிறுவனம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது 75 வழக்குகளை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் "சீல்"வைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக பி.ஆர்.பி. நிறுவனர் பி.ஆர். பழனிச்சாமி உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து அன்சுல் மிஸ்ராவும் மாற்றப்பட்டார்.
சகாயம் குழு நியமனம்
இந்த நிலையில், கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், அவருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது, பின்னர் தமிழக அரசின் சார்பில் மறு சீராய்வு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலானது. அதனை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்ததுடன், 4 நாட்களுக்குள் சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த குழுவினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பாதுகாப்பையும் தமிழக அரசு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
தமிழக அரசு உத்தரவு
இதனையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு, இந்த உத்தரவை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், கனிம வளத்துறைக்கும் அனுப்பி வைத்தது. சகாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள தமிழக அரசின் உத்தரவில், "தாது மணல் மற்றும் கிரானைட் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ளார்" என்பது தெளிவு படுத்தப்படவில்லை என்றும், தற்போது அறிவியல் நகர துணை தலைவராக இருக்கும் சகாயத்தை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கும் உத்தரவை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிகிறது.
இதனால் இன்னும் அவர், அறிவியல் நகர துணைத்தலைவர் என்ற பணியில்தான் இருந்து வருகிறார். இது பற்றி தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "சகாயம் தற்போது இருக்கும் பணியில் இருந்து கொண்டே, கூடுதல் பொறுப்பாக, கிரானைட் குவாரிகள் ஆய்வை நடத்துவார்" என்றார்.
உதவிக்கு அதிகாரிகள்
இதற்கிடையில், மதுரை ஆட்சியருக்கு, தனக்கு பணிக்கு 2 துணை கலெக்டர்கள், 2 தாசில்தார்கள், 2 புவியியல் அலுவலர்கள், 4 பணியாளர்கள், ஒரு தட்டச்சர் , ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஒரு வீடியோ கிராபர், என 14 பேர்களும், போக்குவரத்துக்கு தேவையான கார்கள் மற்றும் அலுவலகம் அமைக்கும் படி சகாயம் கடிதம் அனுப்பி இருந்தார். இதன்படி, சகாயத்துக்கு அலுவலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால், சகாயம் குழுவில் இணைந்து பணியாற்ற அதிகாரிகளும், ஊழியர்களும் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
ஆபிஸ் ரெடி
சகாயத்துக்கு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் ஒரு பெரிய அறை அலுவலமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்துக்கு சகாயம் வருவதற்கு முன்பே அங்கே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சகாயம் குழுவில் இடம்பெறப் போகும் அதிகாரிகளையும் மதுரை மாவட்ட ஆட்சியரே நியமித்துவிட்டார். கடந்த 10ம் தேதியே அவர் தனது விசாரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னமும் சகாயம் தனது விசாரணையை தொடங்கவில்லை. அதற்கான காரணத்தை கேட்டால் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
14 கண்மாயை காணோமே
கிணத்தை காணோம் வட்ட கிணறு இங்கதான வெட்டினேன் என்று ஒரு படத்தில் வடிவேலு காமெடி செய்வார். அது காமெடியல்ல நிஜம்தான் என்று சுற்றுவட்டார பகுதி மக்களைக் கேட்டால் தெரியும். கிரானைட் கொள்ளைக்காக மேலூர் பகுதிகளில் ஆண்டாண்டு காலமாக இருந்த 14 கண்மாய், 13 கால்வாய், வண்டிப்பாதை, பஞ்சமி நிலங்களை காணவில்லை என்று கிராம மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. எனவேதான் மீண்டும் விசாரணைக்கு வரும் சகாயத்திடம் புகார் அளிக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
பைல் எங்கேப்பா?
அந்த கண்மாய்களுக்கு உரிய கோப்புகளும் திடீரென்று மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை கலெக்டர் அலுவலகம், மேலூர் தாலுகா அலுவலகங்களிலும், பொதுப்பணித்துறை அலுவலகங்களில் தேடியும் இதுவரை சிக்கவில்லையாம். இது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சகாயம் குழுவின் விசாரணை தாமதமானதற்கு இதுவும் ஒரு காரணமாம்.
தமிழகம் முழுவதும்
கனிமவளக் கொள்ளை பற்றி சகாயம் மதுரையில் மட்டும் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் அரசுத் தரப்பு உறுதியாக இருக்கிறது. ஆனால் சமூக ஆர்வலர்களும், சகாயமும், தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள கிரானைட், கனிமவள கொள்ளைகளை பற்றி விசாரிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். ஏனெனில் சகாயம் ஆட்சியராக இருந்தபோதே கிரானைட் கொள்ளை பற்றிய தோராய மதிப்பீட்டைச் சொல்லிவிட்டார். அடுத்து வந்த அன்சுல் மிஸ்ரா அனைத்தையும் கண்டுபிடித்து வழக்குகள் போட்டுவிட்டார். ஏராளமான வழக்குகள் மதுரை நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. மொத்தத்தில் அந்த விவகாரம் முடிந்த மாதிரிதான். ஆனால், மற்ற மாவட்டங்களில்தான் விசாரணையே நடக்க வேண்டும்' என்று சொல்கிறார்கள்.
நீதிமன்றத்தை நாட முடிவு
விசாரணை செய்வதாக இருந்தால் தமிழ்நாடு முழுவதும் விசாரணை செய்யலாம். இல்லாவிட்டால் இந்த விசாரணைக் குழுவே பயனற்றது. அதற்கு அரசு முட்டுக்கட்டை போட நினைத்தால் அதை எதித்து நீதிமன்றத்தில் முறையிடவும் சகாயம் தயாராகி வருகிறாராம். எனவேதான் மதுரைக்கு அவர் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
காத்திருக்கும் அதிகாரிகள்
கனிமவள முறைகேடுகள் குறித்த ஆய்வு செய்ய வரும் சகாயத்தின் வருகைக்காக மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து காத்திருக்கின்றனர். ஆனால் சகாயம் இன்னமும் சென்னையில்தான் இருக்கிறார்.
கிண்டியில் உள்ள அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டு இருக்கும் சகாயம், தினமும் அந்த அலுவலகத்துக்கு தவறாமல் வந்துவிடுகிறார். காலையில் அவரது வீட்டில் இருந்து அலுவலகம் வரையிலும், மாலை அலுவலகத்தில் இருந்து வீடு வரையிலும் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு வருகிறது.
சகாயம் ஆய்வுகுழு ஆதரவு இயக்கம்
இதனிடையே சகாயம் ஆய்வுக்குழுவிற்குத் தேவையான விவரங்களை பெற்றுத்தர உதவும் வகையில், "கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வு குழு ஆதரவு இயக்கம்" தொடங்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள முறைகேடுகளை தோண்டி துருவி ஆதாரங்களை கையில் வைத்துள்ளனர்.
சகாயம் எக்ஸ்பிரஸ்
தமிழகம் முழுவதும் உள்ள கனிமவள கொள்ளைகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டால், சென்னையில் இருந்தே எல்லா மாவட்டங்களுக்கும் சென்று வரலாம். மதுரையில் சென்று தங்க வேண்டிய அவசியமோ, அங்கே அலுவலகம் வைக்க வேண்டிய தேவையோ இல்லையாம். கரூர், சேலம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி சகாயத்தின் கைக்கு ஏராளமான ஆவணங்கள் வந்து சேர்ந்துள்ளன. எனவே முதலில் சகாயம் எக்ஸ்பிரஸ் எந்த மாவட்டத்தை நோக்கி கிளம்பப் போகிறதோ?












Click it and Unblock the Notifications