தமிழகம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை... புழல் சிறைத் தாக்குதலுக்கு எச். ராஜா கண்டனம்!
சென்னை: தமிழகம் தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே புழல் சிறையில் நடந்த சம்பவம் நிரூபிப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நேற்றைய தினம் புழல் சிறையில் சிறைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு பகுதி-2ல் சிறை வளாகத்தில் செல்லிட பேசியை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்குடன் சோதனை செய்வதற்காகச் சென்ற 4 காவல் துறையினரை முஸ்லிம் கைதிகள் தாக்கி படுகாயப்படுத்திய செய்தி, சட்டம் ஒழுங்கின் மீது நம்பிக்கையுள்ளவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.

புழலில் ஒரு ஆம்பூர் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் இந்து கைதிகள் உள்ள பகுதிகளில் காவல்துறையினர் சோதனை செய்யும் போது எவ்வித பிரச்னையும் இதுவரை ஏற்பட்டதில்லை. ஆனால் முஸ்லிம் கைதிகள் உள்ள பகுதியில் சோதனை செய்யும் போது மட்டும் இவ்வாறு அடிக்கடி நடப்பது ஏன் என்பதற்கு தமிழக காவல் துறை விளக்கமளிக்க வேண்டும்.
தலையில் படுகாயமடைந்த முத்துமணி மற்றும் காயமடைந்த இளவரசன் ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவிற்கு மோதல் கடுமையாக இருந்துள்ளது. இதேபோல் இதற்கு முன்பு கூட பல சிறைச்சாலைகளில் முஸ்லிம் கைதிகள் காவல்துறையினரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதிலும் மாலை 5.30 மணிமுதல் இரவு 10 மணிவரை சிறைக்குள் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய பயங்கரவாதிகளுடன் காவல்துறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது வெட்கக்கேடானது. தமிழகம் தற்போது காவல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. தலிபானிய சக்திகளின் பிடியில் தமிழகம் உள்ளதையே நேற்றைய சம்பவம் நிரூபிக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர் அல்லது சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்தை கொலைக்களமாக ஆக்கிவிடும். எனவே, தமிழக அரசு இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
