விதிகளை மீறுகிறார்கள், வேட்டி சேலை கொடுக்கிறார்கள்.. அதிமுக மீது எச்.ராஜா புகார்
திண்டுக்கல்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுகவினர் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் கூட விதி மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்று பாஜகவின் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அங்கு நியாயமான தேர்தல் நடப்பதாக தெரியவில்லை. மாநில தேர்தல் ஆணையர் அங்கு சென்றும் பலன் இல்லை. ஆளுங்கட்சியினர் இலவச வேட்டி - சேலைகளை வீடு வீடாக கொடுத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான வாகனங்களில் கொடிகளை கட்டிக்கொண்டு விதிமுறைகளை மீறி வலம் வருகிறார்கள்.

ஸ்ரீரங்கத்தில் அதிமுகவுக்கும், பாரதீய ஜனதாவுக்கும்தான் உண்மையான போட்டி உள்ளது. 1967 ல் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தமிழகத்தை பின்னுக்கு தள்ளிவிட்டன.
தமிழக அரசுக்கு தற்போது 4 லட்சம் கோடி கடன் உள்ளது. இந்த பின்னடைவில் இருந்து மீளவேண்டுமானால் பாரதீய ஜனதா கட்சியால் மட்டுமே முடியும். பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சியை கண்டு மாநில கட்சிகள் அச்சப்படுகின்றன. பாரதீய ஜனதா, தாமரை, மோடி என்ற இந்த 3க்குதான் மக்கள் வாக்களிக்கிறார்கள். கூட்டணிப்பற்றி கவலை இல்லை. பாரதீய ஜனதாவின் அடிப்படை கொள்கைகளை அறிந்த கட்சிகள் மட்டும் கூட்டணியில் இருந்தால் போதும்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே இங்கு உள்ள அகதிகளை அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்யும். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி மதசார்பின்மை என்ற வாசகத்தின் மூலம் இந்து விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டபோது இந்தியாவில் உள்ள கட்சிகள் எதுவும் வாய்திறக்கவில்லை. தற்போது சிலர் தாய்மதம் திருப்பிய செயலுக்கு எதிர்க்கட்சியினர் கூப்பாடு போடுகிறார்கள். கட்டாய மதமாற்றத்தை பாரதீய ஜனதா ஒருபோதும் அனுமதிக்காது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications