"ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக டார்ச் லைட்டை அடமானம் வச்சவரு கமல்.. பேசுவதே அநாவசியம்”.. எச். ராஜா தாக்கு
சென்னை: "ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக டார்ச் லைட்டை அடமானம் வைத்தவர் கமல். அவரைப் பற்றி பேசுவதே அநாவசியம்" என பாஜக மூத்த எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணி ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தார். இதுகுறித்த கேள்விக்கு எச்.ராஜா சூடாக பதில் அளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். அமித் ஷா போன முறை வந்தபோதே நான் சொல்லி இருந்தேன், அமித் ஷா வந்தார், கண்டார், வென்றார். தமிழகத்தில் 7வது முறையாக திமுக ஆட்சிக்கு வரும் என கனவு காண்பவர்களின் அந்தப் பெட்டியில் ஆணி அடிக்கப்பட்டது. மத்தியில் ஆளும் கட்சியின் ஒரு அரசியல் கூட்டத்துக்கு அனுமதி மறுப்பது எவ்வளவு பெரிய ஆணவம்." என்றார்.
அதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எச்.ராஜா, "கமல்ஹாசன் வெட்கங்கெட்ட நபர். கமல்ஹாசன் என்ன செய்தார் என்பது நமக்கு பசுமரத்தாணி போல பதிந்திருக்கிறது. கமல்ஹாசன் டார்ச் லைட்டால் டிவியை உடைத்தார். இலவசத்தை, ஊழலை எதிர்க்கின்றேன் என்றார்.
என் வாழ்நாளில் ஒருநாளும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றார். இன்றைக்கு நாடாளுமன்றத்தில் ஒரு தொகுதி கூட வாங்கவில்லை. தனக்கு ஒரு ராஜ்யசபா சீட் பெறுவதற்காக டார்ச் லைட்டை அடமானம் வைத்தவரைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்பதும் அனாவசியம், பதில் சொல்வதும் அநாவசியம்" என விமர்சித்துள்ளார்.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2018ல் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் பேசும் வார்த்தைகளை கமல்ஹாசன் டிவியில் பார்ப்பதை போலவும், இதனால் கோபமடைந்து டார்ச் லைட்டால் டிவியை உடைப்பது போலவும், மக்கள் நீதி மய்யம் ஒரு தேர்தல் விளம்பரத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது.
இந்த விளம்பரம் அன்றைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், 3.71 சதவீத வாக்குகளை பெற்றுது. இதனால் 2021 சட்டசபை தேர்தலில் அதிகமான வாக்குகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில், 2.45 விழுக்காடு வாக்குகளே மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில் 182 இடங்களில் போட்டியிட்ட மநீம 2.62 சதவீத வாக்குகளைப் பெற்றது. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். அத்தனை இடங்களிலும் தோல்வி அடைந்ததன் காரணமாக கட்சியினர் சோர்வடைந்தனர்.
கமல்ஹாசனும் படங்களில் நடிப்பதில் பிஸி ஆனதால் பலர் கட்சியை விட்டு விலகினர். இதையடுத்து கமல்ஹாசனும் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் சினிமாவில் தீவிரம் காட்டினார். 'விக்ரம்' படத்தின் போது உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கம் காட்டினார் கமல்.
அதைத்தொடர்ந்து, திமுக உடன் இணக்கம் காட்டத் தொடங்கினார் கமல்ஹாசன். ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையின் போது அவரை சந்தித்து பேசினார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போதே திமுக - காங்கிரஸ் அணியில் கமல் இணைவது உறுதியானது.
2024 மக்களவைத் தேர்தல் வந்த போது பத்து தொகுதிகளில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார். அதற்கு ஈடாக மாநிலங்களவை தேர்தலில் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தது. இந்த அடிப்படையில் தற்போது ஜூன் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஒரு சீட்டை கமல்ஹாசனுக்கு கொடுத்துள்ளது. இதன் மூலம் ராஜ்யசபாவுக்குள் அடியெடுத்து வைக்கிறார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications