அண்ணா நூற்றாண்டு நூலகம்... தமிழக அரசுக்கு அக். 31 வரை கெடு விதித்து ஹைகோர்ட் 'வார்னிங்'
சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள குறைகளை அக்டோபர் 31-ந் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடுவிதித்துள்ளது. அப்படி செய்யாவிட்டால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்க தனியாரிடம் சென்னை உயர்நீதிமன்றம் ஒப்படைத்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணியம் ஒருபொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த நூலகத்தை முறையாக பராமரிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அண்ணாநூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, சுந்தர் ஆகியோரை சட்ட ஆணையராக நியமித்தது. இந்த வழக்கறிஞர்கள் நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முறையாக பராமரிக்கவில்லை...
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘இந்த உயர்நீதிமன்றம் பல முறை உத்தரவுகளை பிறப்பித்தும் நூலகத்தை முறையாக அதிகாரிகள் பராமரிக்கவில்லை என்று கூறினார்.

அக்டோபர் 31-க்குள் சரி செய்வோம்
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, வழக்கறிஞர்கள் குழு சுட்டிக் காட்டியுள்ள அனைத்து குறைகளையும் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் சரி செய்யப்படும் என்றார்.

அக். 31 வரை கெடு
தையடுத்து இந்த வழக்கை வருகிற அக்டோபர் 31-ந்தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அதற்குள் நூலகத்தில் உள்ள குறைகள் அனைத்தையும் சரி செய்யவேண்டும்.

எச்சரிக்கை
அதை அரசு செய்யவில்லை என்றால், நூலகத்தை பராமரிக்க தனியார் அமைப்பு ஒன்றை இந்த நீதிமன்றம் உருவாக்கும். அந்த தனியார் அமைப்பு நூலகத்தை பராமரிக்கும். அதற்கான செலவுகளை தமிழக அரசு வழங்க வேண்டியது வரும் என்று எச்சரிக்கை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications