வி.சி.கட்சிக்கு நட்சத்திர சின்னம் கிடைக்காதா?: தேர்தல் கமிஷனுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளிலும் ஒரே சின்னத்தை ஒதுக்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்படி முடிவு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் தற்போது தேர்தல் ஆணைய பட்டியலில் நட்சத்திர சின்னம் இல்லை.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

லோக்சபா தேர்தலில், எங்கள் கட்சி சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில், எங்கள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எங்களது கோரிக்கையை சட்டப்படி பரிசீலிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், ‘நட்சத்திர சின்னம்' வழங்க மறுத்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரர் கட்சி சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதால், அந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகளிலும் ஒரே சின்னத்தை ஒதுக்குவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்படி முடிவு செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் ஆணைய விதிப்படி குறைந்தது 10 சதவீத இடங்களிலாவது போட்டியிட்டால் மட்டுமே அவர்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும். எனவே இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் கிடைக்காது'' என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரவீண்குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications