For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் பலத்த மழை… நொய்யல் ஆற்றில் வெள்ளம்... இருவர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இருவர் பலியாயினர். நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை, குஞ்சராடி மலை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முதல் அணையான சித்திரைச் சாவடி அணைக்கட்டு நிரம்பி, ஆற்றில் வெள்ளம் சீறிப் பாய்ந்து செல்கிறது.

ஆற்றில் வெள்ளம்

ஆற்றில் வெள்ளம்

கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள தரைப் பாலம் மூழ்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பேரூர் - வேடப்பட்டி, மாதம்பட்டி - தொண்டாமுத்தூர், திருச்சி சாலை - பட்டணம் தரைப்பாலம் உள்ளிட்ட தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து துண்டிப்பு

போக்குவரத்து துண்டிப்பு

வெள்ளத்தால் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நிரம்பும் குளங்கள்

நிரம்பும் குளங்கள்

கோவையில் இருந்து சாமளாபுரம்வரை நொய்யல் ஆற்றில் வெள்ளமாக பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 27 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கோளரம்பதி, நரசம்பதி, கிருஷ்ணாம்பதி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நிலத்தடி நீர்மட்டம்

நிலத்தடி நீர்மட்டம்

பேரூர் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் வழியாக செல்லும் நீரால் செல்வம்பதி, செல்வசிந்தாமணி, உக்கடம் பெரிய குளத்துக்கும், புட்டுவிக்கி அணைக்கட்டில் இருந்து குறிச்சி குளத்துக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதன் மூலம் நிலத்தடி நீர் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவையில் மேலும் சில நாட்களுக்கு மழை எதிர்பார்க்கப்படுவதால் கோவையை சுற்றி உள்ள குளங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

குளக்கரையில் ஆக்கிரமிப்பு

குளக்கரையில் ஆக்கிரமிப்பு

வெள்ளலூர் குளத்தின் நீர்வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் இந்த குளத்துக்கு மட்டும் தண்ணீர் செல்லவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றவும், நீர்வழித்தடத்தில் குடியிருப்பவர்களுக்கு வேறு இடம் ஒதுக்கவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளலூர் குளத்துக்கு தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் கோரிக்கை

நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும், பேரூர் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் பகுதிகளில் நொய்யலில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் நொய்யல் ஆற்றின் நீர்வழித்தட பகுதிகளில் புதர்கள் மண்டி கிடப்பதால் முழு அளவில் தண்ணீர் பாய்ந்து செல்ல முடியவில்லை. எனவே நொய்யல் ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்பணையில் தண்ணீர்

தடுப்பணையில் தண்ணீர்

நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கோவை சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை யில் தண்ணீர் அருவிபோல் கொட்டுகிறது. இதனை அந்த பகுதியை சேர்ந்த ஏராளான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

திருப்பூரில் வெள்ளம்

திருப்பூரில் வெள்ளம்

திருப்பூர் பகுதியிலுள்ள தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. நல்லம்மன் தடுப்பணை, யானை மடை அணை, ஒட்டணை ஆகியவை நேற்று காலை முதல் நிரம்பி வழிகின்றன. பல ஆண்டுகளுக்கு பிறகு, தடுப்பணை களிலிருந்து இரண்டு அடி உயரத்திற்கு வெள்ள நீர் சீறிப்பாய்ந்து வருகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய பாலம்

வெள்ளத்தில் மூழ்கிய பாலம்

நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், திருப்பூர் மங்கலம் ரோட்டையும், காலேஜ் ரோடு, அவிநாசி ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையில், அணைப்பாளையத்திலுள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

2 பேர் உயிரிழப்பு

2 பேர் உயிரிழப்பு

கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி, (70) உயிரிழந்தார். அவரது மனைவி லட்சுமி, (60) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மலுமிச்சாம்பட்டியில் வசிக்கும் அருண், 22 என்பவர், மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

மழைஅளவு

மழைஅளவு

கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை சராசரியாக 24.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சின்னக் கல்லாறில் 76 மில்லி மீட்டரும், வால்பாறையில் 73 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

English summary
Various low-lying areas and bridges in the Coimbatore has been flooded due to the rain. Due to water logging and the over-flowing Noyyal river, traffic had to be diverted on the Perur-Vedapatti road compelling commuters take the Selvapuram-Nagarajapuram-Veerakeralam road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X