கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பில் திண்டுக்கல் கோவில் நிலம்? ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவு!
மதுரை: திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் காளியம்மன் கோவில் நிலத்தை கிறிஸ்தவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கக் கோரிய வழக்கில், "ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் ஐகோர்ட் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அம்பாத்துரையில் காளியம்மன் கோவில், மண்டு கருப்பசாமி கோவில், வேம்பு மாரியம்மன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் அமைந்துள்ளன. நிலம் தொடர்பான வருவாய்த்துறை ஆவணங்கள் காளியம்மன் கோவில் பெயரில் உள்ளன.

அதை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். இதை தடுத்து கோவில் நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். நடவடிக்கை இல்லை. இந்து சமூகத்தினர் கோவில் நிலத்தை சுற்றிலும் எல்லைக் கற்களை நட்டனர். அவற்றை கிறிஸ்தவர்களில் சிலர் அகற்றி, நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றனர். கேள்வி எழுப்பியவர்களை தாக்கினர்.
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பது வருவாய்த்துறை அதிகாரிகளின் கடமை. அதிலிருந்து தவறி ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோயுள்ளனர். கோவிலுக்கு சொந்தமான அப்பகுதியிலுள்ள துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். அதை நடத்தவிடாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்தனர்.
இதை எதிர்த்து கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கார்த்திகை தீபம் ஏற்ற டிசம்பர் 2 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பாதுகாக்க சுற்றிலும் வேலி அமைத்து, ஆக்கிரமிப்பு நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், ஆத்துார் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மயில்வாகன ராஜேந்திரன் ஆஜரானார். விசாரணையைத் தொடர்ந்து, நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 19 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஓ, தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications