திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ 1000 டிக்கெட் விவகாரம்! தவறாக வீடியோ வெளியிட்டவர் மீது புகார்
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் பணியாளர் ஒருவர் பண வசூல் செய்து டிக்கெட் வழங்கும் வீடியோ தவறானது என அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா நடைபெறும். இந்த விழாவையொட்டி தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

பலர் வெளிநாடுகளில் இருந்தும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். சூரசம்ஹாரம் நாளை நடைபெறவுள்ள நிலையில் திருச்செந்தூர் கோயிலில் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயிலில் தரிசன கட்டண விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரூ 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ 2000 ஆக உயர்த்தப்பட்டதாகவும் அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாட்களில் ரூ 500 ஆகவும் விசேஷ நாட்களில் ரூ 2000 ஆகவும் இருந்த நிலையில் தற்போது ரூ 3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அது போல் சிறப்பு தரிசன கட்டணம் ரூ 100 என இருந்த நிலையில் அது ரூ 1000 ஆக உயர்த்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இந்த கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக இலவச தரிசனத்திற்கு ஒரு வழி, மூத்த குடிமக்களுக்காக ஒரு வழி, மாற்றுத்திறனாளிகளுக்கான வழி , ரூ 100 சிறப்பு தரிசன கட்டண வழி என 4 வகை வழிகள் உள்ளன. ரூ 100 என இருந்த சிறப்பு தரிசன டிக்கெட் ரூ 1000 ஆக உயர்ந்ததாக செய்திகள் வெளிவந்தன.
ரூ 1000 கட்டண தரிசன வரிசையில் உரிய ரசீது வழங்காமல் பணம் மட்டும் பெற்றுக் கொண்டு பக்தர்கள் திருக்கோயிலுக்கு அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் ரூ 1000 கட்டண வழியில் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பதாக உண்மைக்கு புறம்பான செய்தி வெளியானது.
ரூ 1000 கட்டண தரிசன வழியில் சரிபார்க்கும் சிறப்பு அலுவலர் கட்டண ரசீது வழங்குவதை முற்றிலும் மறைத்து சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவதை காட்டாமல் கோயில் பணியாளர் பணம் பெறுவதை மட்டும் ஒரு கோணத்தில் வீடியோ எடுத்து தமிழக அரசுக்கும் திருக்கோயில் நிர்வாகத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தி சமூகவலைதளங்களில் பரவியதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இது போல் பொய்யான தகவலை பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறநிலையத் துறை சார்பில் அவர் மீது போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு தரிசன கட்டணம் ரூ 1000 வசூலிக்கப்படுகிறது. ரூ 100 தரிசன கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications