வளர்ந்த வேகத்தில் வீழ்ந்த சின்னத்துரை... சின்னாபின்னமான கதை...
தூத்துக்குடி: அரசியலில் வெகு வேகமாக வளர்ச்சி ஒருவருக்கு இருந்தால் திடீரென்று படுபாதாளத்தில் தள்ளப்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை சின்னத்துரையின் வாழ்க்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தளவாய்புரத்தில் அதிமுக கிளைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டவர் சின்னத்துரை.
சாதாரண கூலித்தொழிலாளியாக கிராமத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய சின்னத்துரை இன்றைக்கு பலகோடிக்கு சொந்தமான பங்களாவில் வசிக்கிறார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
கடந்த 2001 - 2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளராக ஆனபிறகே அரசியலில் இவருக்கு ஏறுமுகமானது.
அதிமுக அமைச்சர்கள்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் அதிமுக மாநில நிர்வாகிகளை ராஜ உபசாரம் செய்து அனுப்புவது அனிதா ராதாகிருஷ்ணனின் வழக்கம். அவரது சார்பில் உதவியாளரான சின்னத்துரை இதனை செய்தார். இதனால் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு பரிச்சயமாகியிருக்கிறார்.
சின்னத்துரையின் விசுவாசம்
கடந்த திமுக ஆட்சிகாலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அப்போது உதவியாளரான சின்னத்துரை அவருடன் போகவில்லை. அதிமுகவிலேயே இருந்து பல பதவிகளைப் பெற்றார்.
பலகோடி சொத்து
மிகக்குறுகிய காலத்தில் சின்னத்துரை பலகோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரராக உயர்வதற்கு காரணம் அரசியல் தொடர்புதான் என்கின்றனர். மேல்மட்டத் தொடர்புகள் கிடைத்த உடன் உள்ளூர் நிர்வாகிகளை மதிப்பதில்லையாம் எனவேதான் சின்னத்துரையின் பதவி பறிப்புக்கு தூத்துக்குடி கட்சிக்காரர்கள் யாரும் வருத்தப்படவில்லை என்கின்றனர்.
திமுக தொடர்பு
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக பதவி வகித்த சின்னத்துரை அப்போதைய அமைச்சர் கீதா ஜீவனையும், தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியையும் அனுசரித்துப் போனார் என்பது அவர் மீதான புகார்.
வேட்டுவைத்த உதவியாளர்
திமுகவினர் துணையோடு மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தில் ஏகமாய் முறைகேடு செய்துள்ளதாக வீரபாண்டியபட்டணத்தைச் சேர்ந்த கணேசன் புகார் அளித்துள்ளார். இவர்தான் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்குத் தொடுத்தவர். இவர் சின்னத்துரையின் உதவியாளராம். இவர் கொடுத்த புகார்தான் சின்னத்துரை கட்சியை விட்டே நீக்கும் அளவிற்கு சென்றுள்ளது.
கட்சியில் இருந்து நீக்கம்
சின்னத்துரை ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமல்லாது, அவர் வகித்த அனைத்து கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் கழற்றி விடப்பட்டுள்ளார்.
அம்மாவின் விசுவாசி
இந்த பறிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சின்னத்துரை அம்மா கொடுத்தார்கள், அம்மா எடுத்து கொண்டார்கள். நான் எப்போதும் அம்மாவின் விசுவாசியாக இருப்பேன் என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டார்.
அனிதாவின் உள்குத்து
சின்னத்துரையின் வீழ்ச்சிக்கு உதவியாளர் கணேசன்தான் காரணம் என்றாலும் இன்னொரு விவகாரத்தையும் முக்கியமானதாக கூறுகின்றனர். திமுகவில் இப்போது மாவட்டச் செயலாளர் பெரியசாமியும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் எலியும் பூனையுமாக இருக்கின்றனர்.
கோபமான ஜெ
அனிதாவை அரசியல் ரீதியாக வீழ்த்த ஒருகாலத்தில் அவரிடம் உதவியாளராக இருந்த சின்னத்துரையிடம் ஆலோசனை கேட்டாராம் பெரியசாமி. இது தொடர்பாக சின்னத்துரையும், பெரியசாமியும் பேசிக்கொண்ட அரைமணி நேர ஆடியோ சிடி அதிமுக தலைமைக்கு கிடைத்துள்ளது. இருவருக்கும் இடையேயான பேச்சினை பதிவு செய்தது அனிதா ராதாகிருஷ்ணன்தான் என்கின்றனர்.
பதவிக்கு எமன்
ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எதிர்கட்சி மாவட்டச் செயலாளருடன் பேசி பழகியதுதான் சின்னத்துரைக்கு எமனாக அமைந்துவிட்டது என்கின்றனர்.
வைகுண்டராஜனுடன் தொடர்பு
இது தவிர மணல் ஏற்றுமதி தொழிலதிபர் ஒருவரின் வேட்பாளராக சின்னத்துரை திணிக்கப்பட்டதாகவும் தலைமைக்கு தகவல் தெரியவரவே,சீனியர்களுக்கு டோஸ் விழுந்துள்ளது.
எது எப்படியோ கிடுகிடுவென அரசியலில் வளர்ந்த வேகத்தில் படுவேகமாக வீழ்ந்துவிட்டார் சின்னத்துரை.












Click it and Unblock the Notifications