ஊட்டியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் ஓட்டலில் 20 லட்சம் மோசடி..அந்த வார்த்தையால் சறுக்கிய மேலாளர்
ஊட்டி: பிரபல பாலிவுட் நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான மிதுன் சக்கரவர்த்திக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. இந்த ஓட்டலில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரிலேயே குறுஞ்செய்தி அனுப்பி, ஆன்லைனில் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த மோசடி எப்படி நடந்தது? வழக்கமாக மிதுன் சக்கரவர்த்தி ஓட்டல் மேலாளரை வித்தியாசமான முறையில் மேலாளரை அழைப்பாராம்.. அப்படி வந்த அழைப்பில் தான் ஏமாந்துள்ளார் மேலாளர்.. விவரமாக பார்ப்போம்.
350 க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள புகழ் பெற்ற பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி (வயது 74).. இவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ஆவார். இவர் நடித்த பல படங்கள் புகழ் பெற்றவை என்றாலும் டிஸ்கோ டான்சர் திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்ட படமாகும். இவர் கடந்த 2015ம் ஆண்டு வெளியான யாகாவாராயினும் நா காக்க படத்தில் நடித்துள்ளார். மிதுன் சக்கரவர்த்தி நடிப்புக்கு நடுவில் மிதுன் மோனார்ச் குழும நிறுவனங்களைச் சொந்தமாக நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தில் எம்பியாகவும் ஒரு காலத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு ஊட்டியில் நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. இந்த ஓட்டல் மேலாளரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்தது. அதில், 'குன்னூரில் முக்கிய விஷயமாக பணியில் இருக்கிறேன். நான் இருக்கும் இடத்தில் செல்போன் சிக்னல் பிரச்சினை உள்ளது. எனவே, ஓட்டல் சம்பந்தமான வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது என்றும், அந்த பணத்தை நான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
வழக்கமாக மிதுன் சக்கரவர்த்தி ஓட்டல் மேலாளரை தாதா என்று அழைப்பது வழக்கமாம். அந்த பெயரில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி வந்ததால், மேலாளருக்கு சந்தேகமே ஏற்படவில்லையாம். இதனால் உடனே பதில் அளித்த மேலாளர், 'ஓட்டலுக்கு சொந்தமான பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.70 லட்சமும், நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.30 லட்சமும் உள்ளது என்று கூறினாராம். முதல் கட்டமாக ரூ.20 லட்சம் உடனடியாக அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் வங்கி கணக்கு விவரங்களுடன் பதில் வந்திருக்கிறது. இதை நம்பிய மேலாளர், வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி விட்டார். இதையடுத்து நிரந்தர வைப்பு தொகையில் உள்ள ரூ.30 லட்சத்தையும், அதன் பின்னர் மற்ற கணக்குகளில் உள்ள ரூ.50 லட்சத்தையும் அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்திருக்கிறது.
இதற்கிடையில் மிதுன் சக்கரவர்த்தி, மேலாளரை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை, உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன் என்று மேலாளர் கூறியபோது தான், மோசடி நடந்தது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டல் மேலாளர் உடனடியாக ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிரந்தர வைப்பு தொகையில் இருந்த பணம் மற்றும் மற்ற கணக்குகளில் இருந்த பணத்தையும் அனுப்ப எடுத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மிதுன் சக்கரவர்த்தி தடுத்து நிறுத்தினார்.
இதனால் ரூ.80 லட்சம் தப்பியது. இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரித்தனர். அதில் நாக்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள வங்கி கணக்கிற்கு பணம் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஒருவேளை மேலாளர் மிதுன் சக்கரவர்த்திக்கு போனில் அழைத்து பேசாமல் எல்லா பணத்தையும் அனுப்பி இருந்தால்.. மொத்தமாக ஒரு கோடி மோசடி செய்யப்பட்டிருக்கும்.. போனில் அழைத்த காரணத்தால் பணம் கணிசமாக தப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications