மழை வெள்ளத்தில் சிக்காமல் மயிலாப்பூர் தப்பியது எப்படி தெரியுமா?
சென்னை: கடுமையான மழை வெள்ளத்தில் சென்னையின் புறநகர் மூழ்கிக்கிடக்க நகரின் இதயப் பகுதியான மயிலாப்பூர் எந்த பாதிப்பிலும் சிக்காமல் சும்மா ஜம் என்று இருக்கின்றன. சாலைகள் பளிச் என்று கழுவி விட்டது போல புத்தம் புதிதாய் ஜொலிக்கின்றன. இதற்கு காரணம் திட்டமிட்டு அமைக்கப்பட்டு சாலைகள்தான். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் வெள்ளநீர் சில மணிநேரங்கள் மட்டுமே தங்கியிருக்கும் பின்னர் வழிந்தோடி விடும். அந்த அளவிற்கு சாலைகளில் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உங்க ஊர்ல வெள்ளம் எப்படி இருக்கு? உங்க வீட்டுக்குள்ள தண்ணீ வந்திருச்சா? என்று இரவு நேரத்தில் கூட போன் போட்டு அக்கறையாக விசாரிக்கிறார்கள் சொந்த பந்தங்கள். எங்க வீட்டுப்பக்கம் தண்ணீ வராது நாங்க மேடான ஏரியால இருக்கோம் என்று சொன்ன பிறகுதான் நிம்மதி பெருமூச்சு வருகிறது சொந்த பந்தங்களுக்கு. அந்த அளவிற்கு சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைப் பார்த்து அச்சமடைந்துதான் போயிருக்கிறார்கள் தென்மாவட்ட மக்கள்.
சென்னையில் வெள்ளம் வீட்டிற்குள் வருவது ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அன்றாட நிகழ்வுதான். கூவம் ஆறு, அடையாறு பகுதிகளிலும், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் அனுப்பவிக்கும் சிரமம்தான். ஆனால் தென்சென்னைவாசிகள் இந்த அளவிற்கு சிரமத்தினை சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஆண்டு புயல் கூட இல்லை காற்றழுத்த தாழ்வு நிலைக்கே புறநகரில் கட்டப்பட்டிருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
அண்ணாசாலை முதல் பல முக்கிய சாலைகளையும் வெள்ளநீர் மூழ்கடித்தது. பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறியது. ஆனால் மயிலாப்பூரில் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியதற்கான அறிகுறியே தென்படவில்லை.

குளமான மெரீனா
மெரீனா கடற்கரையில் கடலும், மணலும் தெரியாத அளவிற்கு குளமாக மாறியது. இதனால் காலையில் நடைபயிற்சி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். காந்தி சிலை அருகே வெள்ளம் நீர் குளம்போல தேங்கியதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

ராதாகிருஷ்ணன் சாலை
அதேநேரத்தில் சிவாஜி சிலையில் இருந்து தொடங்கும் ராதாகிருஷ்ணன் சாலை சுத்தமாக காணப்பட்டது. மழை பெய்த அறிகுறியே தென்படவில்லை. மரத்தில் இருந்து ஒரு இலை உதிர்ந்த தடம் கூட தென்படவில்லை. காரணம் இல்லாமல் இல்லை. அந்த அளவிற்கு இந்த சாலை வடிகால் வசதியுடன் கட்டப்பட்டிருக்கிறது.

முதல்வர் செல்லும் சாலை
போயஸ்கார்டனில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் செல்வதற்கு ராதாகிருஷ்ணன் சாலையைத்தான் பயன்படுத்துகிறார் எனவேதான் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலை கழுவி விட்டது போல எப்போதும் பளீச் என்று இருக்கிறது. கடற்கரை சாலையும் சுத்தமாகவே காணப்படுகிறது.

மாட வீதிகளிலும் சுத்தம்
மயிலாப்பூர் மாட வீதிகளில் கூட வெள்ளநீர் தங்கவில்லை. மழை வெள்ளம் வழிந்து தெப்பக்குளத்தில் வழிந்தோடிவிடுகிறது. மயிலாப்பூரில் தெப்பக்குளங்கள் அதிகம் இருப்பதும் வெள்ளம் வடிவதற்கு ஒருகாரணமாக இருக்கிறது.

ஆக்கிரமிப்புகள் அதிகம்
புறநகர் பகுதிகளில் வடிகால் வசதிகள் செய்யப்படாமல் எந்த வித திட்டமிடலும் இல்லாத சாலைகளும், ஏரிகள், கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டதும் வெள்ளத்தில் மிதக்க காரணமாக இருக்கிறது. மயிலாப்பூரில் வீடுகள் நெருக்கமாக இருந்தாலும் வெள்ள பாதிப்பில் சிக்கியதில்லை. அதே நேரத்தில் காற்றோட வசதியோடு வீடு தேடி புறநகர் பக்கம் போனவர்கள்தான் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications